Breaking News
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடரர், ஜோகோவிச் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரர், இந்திய இளம் வீரர் சுமித் நாகலை போராடி வீழ்த்தினார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் தொடக்க நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 6-1, 6-4 என்ற நேர்செட்டில் ராபர்டோ கார்பலெஸ்சை (ஸ்பெயின்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), தரவரிசையில் 190-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சுமித் நாகலை சந்தித்தார். தகுதிநிலை வீரரான சுமித் நாகல் முதல் செட்டை வசப்படுத்தி பெடரருக்கு அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் சரிவில் இருந்து மீண்ட பெடரர் அடுத்த 3 செட்களையும் தனதாக்கினார். 2 மணி 30 நிமிடங்கள் போராடிய பெடரர் 4-6, 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றியின் மூலம் பெடரர் ‘டாப்-8’ வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த போட்டி லண்டனில் நவம்பர் மாதம் நடக்கிறது. பெடரருக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு செட்டை கைப்பற்றியதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரதான சுற்றில் ஒரு செட்டை வென்ற 4-வது இந்திய வீரர் என்ற சிறப்பை சுமித் நாகல் பெற்றார்.

38 வயதான பெடரர் வெற்றிக்கு பிறகு அளித்த பேட்டியில், ‘முதல் செட் ஆட்டம் எனக்கு கடினமாக இருந்தது. சுமித் நாகல் களத்தில் வலுவாக செயல்பட்டார். அவர் அடித்த பல பந்துகளை தவற விட்டேன். பலமுறை பந்துகளை ஆடுகளத்துக்கு வெளியே அடித்து தவறு இழைத்ததால் முதல் செட்டை இழந்தேன். அதன் பிறகு சுதாரித்து விளையாடி வெற்றி பெற்றேன். சுமித் நாகல் நன்றாக ஆடினார். களத்தில் எந்த மாதிரி செயல்பட வேண்டும் என்பது அவருக்கு தெரிகிறது. அதனால் அவருக்கு நிலையான டென்னிஸ் வாழ்க்கை இருப்பதாக நினைக்கிறேன்’ என்றார்.

22 வயதான சுமித் நாகல் கூறுகையில், ‘கிராண்ட்ஸ்லாமில் எனது அறிமுக ஆட்டத்தை இதை விட பெரியதாக எதிர்பார்க்க முடியாது. ரசிகர்களின் ஆரவாரம் வியப்புக்குரிய வகையில் இருந்தது. ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து விளையாடினேன். பெடரரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்’ என்றார்.

இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-4, 6-1, 6-2 என்ற நேர்செட்டில் 88-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரனை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 1 மணி 25 நிமிடம் நடந்தது.

மற்ற ஆட்டங்களில் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), போர்னா கோரிச் (குரோஷியா), பாப்லோ காரேனோ பஸ்தா (ஸ்பெயின்), டேவிட் கோபின் (பெல்ஜியம்), டிமிட்ரோவ் (பல்கேரியா) உள்ளிட்டோரும் வெற்றி பெற்றனர்.

செரீனா அபாரம்

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 6 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-1 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான மரிய ஷரபோவாவை (ரஷியா) ஊதி தள்ளி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற செரீனாவுக்கு 59 நிமிடமே தேவைப்பட்டது. செரீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷரபோவா தொடர்ச்சியாக சந்தித்த 19-வது தோல்வி இதுவாகும்.

இதே போல் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் 80-ம் நிலை வீராங்கனையான ஜரினா டியாஸ்சை (கஜகஸ்தான்) சாய்த்து 2-வது சுற்றை எட்டினார்.

முகுருஜா தோல்வி

2-வது நாளான நேற்றைய ஆட்டத்தில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) அதிர்ச்சிகரமாக வீழ்ந்தார். அவரை 2-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கே விரட்டினார்.

செக்குடியரசின் பெட்ரோ கிவிடோவை தன்னை எதிர்த்த சக நாட்டவரான அலெர்டோவாவை 6-2, 6-4 என்ற நேர் செட்டில் தோற்கடித்து 2-வது சுற்றை உறுதி செய்தார்.

வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) ஆகியோரும் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.