அமேசான் காட்டுத் தீயால் நமக்கு என்ன ஆபத்து?
பற்றி எரிவது அமேசான் காடுகள் மட்டுமல்ல; மனித மனங்களும்தான்!
இருக்காதா பின்னே? பூமிப்பந்தின் நுரையீரல் அல்லவா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
அமேசான் மழைக்காடுகளைத்தான் சொல்கிறோம். நாம் வாழும் உலகின் 20 சதவீத ஆக்சிஜன் தேவையை இத்தனை காலமும் உற்பத்தி செய்து வாரி வழங்கிக்கொண்டிருந்தது இந்த அமேசான் காடுகள்தான். அதனால்தான் பூமியின் நுரையீரல் என்ற செல்லப்பெயர், இந்த அமேசான் மழைக்காடுகளுக்கு வந்திருக்கிறது.
அமேசான் மழைக்காடுகள் எங்கே இருக்கின்றன என்ற கேள்வி எழும்.
அமேசான் மழைக்காடுகள் என்பது தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மழைக்காடுகள்தான். அமேசான் படுகையின் பரப்பளவு 70 லட்சம் சதுர கிலோ மீட்டர் என்கிறார்கள். இதில் காடுகள் மட்டும் 55 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளன.
இதில் 60 சதவீதம் பிரேசில் நாட்டிலும், எஞ்சியவை கொலம்பியா, பெரு, வெனிசூலா, ஈக்குவடார், பொலிவியா, கயானா, சுரிநாம் ஆகிய நாடுகளிலும் பரந்து விரிந்து கிடக்கின்றன.
பூமியின் 10 சதவீத பல்லுயிரினங்களுக்கு தாய்வீடு இந்த அமேசான் காடுகள்தான்.
கணக்கிட முடியாத எண்ணிக்கையிலான விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் தாயகமும் இந்த அமேசான் காடுகள்தான்.
குளோபல் வார்மிங் என்று சொல்லப்படுகிற உலக வெப்ப மயமாதலை ஓரளவுக்கு தடுத்து நிறுத்துவதில் முக்கிய பங்கு இவற்றுக்கு உண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அமேசான் மழைக்காடுகள் மட்டும் மறைந்து விட்டால், நாம் சுவாசிக்கும் காற்றுக்கும், குடிக்கும் தண்ணீருக்கும் திண்டாடும் நிலை உருவாகி விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள்.
அமேசான் மழைக்காடுகளில் உள்ள ஈரப்பதம், தீயையே தடுத்து விடும் ஆற்றல் வாய்ந்தவை என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது உண்டு. அப்படிப்பட்ட அமேசான் மழைக்காடுகள் பற்றி எரிந்து கொண்டிருப்பதுதான் ஆச்சரியம்.
அமேசான் மழைக்காடுகள் பற்றி எரிவது ஒன்றும் புதிது இல்லை. ஆனால் இப்போது போல் முன் எப்போதும் பற்றி எரிந்ததில்லை என்று புள்ளி விவரம் சொல்கிறது, 2013-ம் ஆண்டில் இருந்து அமேசான் காட்டுத்தீ நிலவரத்தை பதிவு செய்து வருகிற பிரேசில் நாட்டின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகிறபோது, இந்த ஆண்டு இதுவரையில் மட்டும் அமேசான் மழைக்காடுகள் எரிகிற சம்பவங்கள் 84 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருப்பதாக பிரேசில் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புள்ளி விவரம் சொல்கிறது.
இதனால் நாம் மூச்சு திணறாமல் சுவாசிக்க ஆக்சிஜன் வழங்கிக்கொண்டிருந்த அமேசான் மழைக்காடுகள் இப்போது புகை மண்டலத்தால் மூச்சு திணறிக்கொண்டிருக்கும் சோகம் அரங்கேறி வருகிறது.
எப்படி அமேசான் மழைக்காடுகள் தீப்பற்றி எரிகின்றன என்ற கேள்விக்கு ஆணித்தரமான பதில் இதுவரை கிடைக்கவில்லை. மின்னல்கள் வெட்டி அதனால் தீப்பற்றி எரிவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அமேசான் மழைக்காடுகளின் அழிவுக்கு மனிதர்கள்தான் காரணம்; மனிதர்களின் அதீத சுயநலம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் விசுவரூபம் எடுத்து வருகிறது. பிரேசில் நாட்டு மக்கள் விவசாயம் செய்வதற்காக, கனிம வளங்களை தோண்டி எடுப்பதற்காக அவர்களே காட்டுக்கு தீ வைக்கிறார்கள் என்ற புகாரும் பரவலாக உள்ளது.
ஏனெனில் அமேசான் மழைக்காடுகளில் அதிகளவு ஈரப்பதம் உள்ள நிலையில், அவ்வளவு எளிதாக இயற்கையாக தீப்பிடித்து விடாது என்ற கருத்தும் வலுத்து இருக்கிறது.
அமேசான் காட்டுத் தீக்கு முற்றிலும் வறண்ட வானிலை, அதீத வெப்பநிலைதான் காரணம் என்பது பிரேசில் சுற்றுச்சூழல் அமைச்சர் ரிகார்டோ சேல்ஸ் கருத்தாக இருக்கிறது. ஆனால் தீப்பற்றி எரிவதற்கு வறண்ட வானிலையோ, மின்னலோ எதுவும் காரணம் இல்லை, இது மனிதர்களால் வைக்கப்பட்ட காட்டுத்தீ என்பது வானிலை ஆராய்ச்சியாளர் ஹேலி பிரிங்கின் கருத்தாக அமைந்துள்ளது.
இப்போது பல்லாயிரக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிவதின் காரணமாக, உலக நாடுகள் பலவும் பிரேசிலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
அமேசான் காடுகளில் பற்றி எரிகிற தீயை அந்த நாடு கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், அந்த நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வரப்போவதில்லை என்று பிரான்சும், அயர்லாந்தும் அறிவித்துள்ளன.
பிரேசில் நாட்டில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதை நிறுத்துவது பற்றி ஐரோப்பிய கூட்டமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்று பின்லாந்து ஓங்கிக்குரல் கொடுக்கிறது.
ஒரு படி மேலே போய் விட்டார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்.
“எங்கள் வீடு எரிந்து கொண்டிருக்கிறது. நமது கிரகத்துக்கு 20 சதவீத ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நுரையீரல் எரிந்து கொண்டு இருக்கிறது. இது சர்வதேச பிரச்சினை. ஜி-7 உச்சி மாநாட்டில் இதுபற்றி விவாதிக்க வேண்டும்” என்று மேக்ரான் குரல் கொடுத்தார். 22 மில்லியன் டாலர் நிதியை அவசரமாக விடுவிக்க வேண்டும் என்று சொன்னார்.
ஆனால் அதை பிரேசில் உதாசீனப்படுத்தி விட்டது.
“ஜி-7 நாடுகளுக்கு நன்றி. ஆனால் இந்த நிதியை ஐரோப்பாவில் காடுகளைப் பெருக்குவதற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். உலகின் பாரம்பரிய பெருமைமிக்க பிரான்ஸ் தேவாலயத்தில் ஏற்பட்ட தீயைக்கூட மேக்ரானால் தடுக்க முடியாமல் போய்விட்டது. அவர் எங்கள் நாட்டுக்கு பாடம் சொல்லித்தர நினைக்கிறார். அவர் பிரான்சிலும், அதன் காலனிகளிலும் செய்ய வேண்டிய காரியங்கள் அனேகம் உண்டு” என்று பிரேசில் அதிபரின் தலைமை பணியாளர் அதிகாரி ஆனிக் லோரன்ஸோனி சொல்லி இருக்கிறார் சூடாக.
தற்போது தீயை அணைக்கும் பணியில் பாதுகாப்பு படைகளை பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ களம் இறக்கி உள்ளார். ஒரு மாத காலம் பாதுகாப்பு படைகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடும் என அவர் சொல்லி இருக்கிறார். தற்போது அங்கு 7 மாகாணங்களில் 44 ஆயிரம் படை வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டாலும் தீயின் வேகம் குறையவில்லை. இது ஆபத்தை நோக்கி வழிநடத்துவதை காண முடிகிறது.
ஆகஸ்டு 22-ந்தேதி நிலவரப்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை ஏறத்தாழ 75 ஆயிரம் தீ சம்பவங்களை பிரேசில் நாட்டின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பதிவு செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இப்போது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசாவின் பூமி கண்காணிப்பு கணினி தரவு மற்றும் தகவல் அமைப்பு தீப்பற்றி எரியும் சம்பவங்கள் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் படங்களை வெளியிட்டு இருக்கிறது.
இதில் ஒரு படம், பிரேசில் மற்றும் பொலிவியாவின் காற்று மண்டலத்தில் கார்பன் மோனாக்சைடு கலந்திருப்பதை காட்டுகிறது. இந்த கார்பன் மோனாக்சைடைப் பொறுத்தமட்டில், ஒரு மாத காலம் கூட அப்படியே இருக்கும். அது நீண்ட தொலைவுக்கு பயணிக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. அது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும். சுவாசிக்கிற ஆக்சிஜனிலும் இந்த கார்பன் மோனாக்சைடு கலக்கும். அதை சுவாசிக்கிறபோது மனிதர்களுக்கு தலைவலி, வாந்தி, மயக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். தொடர்ந்து சுவாசிக்கிறபோது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். நெஞ்சு வலியை உண்டு பண்ணும். உயிரையும் பறிக்கும் ஆபத்தும் உண்டு.
அமேசான் காட்டுத்தீயாலும், கார்பன் மோனாக்சைடு பரவலாலும் நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ?
“இந்த தீயின் விளைவாக உடனடியாக தென் அமெரிக்காவின் பருவ நிலையில் தாக்கம் ஏற்படும். அங்கு மழை குறைந்து போவதற்கு வாய்ப்பு உண்டு. இதனால் வறண்ட வானிலைக்கு வழிநடத்தும். உலக வெப்பமயமாதலில் கார்பன் உமிழ்வுகள் பங்கு வகிக்கும். ஆனால் நீண்ட கால உலகளாவிய தாக்கம் எப்படி இருக்கும் என்று கணித்து சொல்வது கடினம்” என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் மல்ஹி. எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியதிருக்கிறது.
அமேசான் காட்டுத்தீயால் நமக்கு ஆபத்து உண்டா, இல்லையா என அறுதியிட்டுச்சொல்ல முடியவில்லை என்பதுதான் தற்போதைய நிலை.
அமேசான் காடுகள் நமக்கு சுவாச காற்றைத்தந்த காலம் மாறி, நம் உயிரைப்பறிக்கும் காலம் வந்தால்? நினைத்துப்பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. அப்படி ஒரு நிலை வராது என்று நம்புவோம். வரவும் கூடாது; வந்தால் தாங்காது மானுடம்.
அமேசான் மழைக்காடுகளை காப்பாற்றியாக வேண்டும். பற்றி எரிகிற தீ அணைக்கப்பட்டால்தான் அங்கெல்லாம் வாழ்கிற நமது சக மனிதர்கள், பேரழிவில் இருந்து காக்கப்படுவார்கள். அமேசான் காடுகளில் மீண்டும் வருமா ஈரப்பதம்? அது மனித மனங்களை குளிர்விக்குமா?