காஷ்மீரில் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட போதும் மாணவர்கள் வருகை இல்லை
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 5-ந் தேதி அதிரடியாக ரத்து செய்தது. மேலும் காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. இதனால் தவறான தகவல்களை, வதந்திகளை பரப்பி விரும்பத்தகாத விளைவுகள் நடப்பதைத் தடுக்கிற விதத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தரைவழி தொலைபேசி, இணையதள சேவை, அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களின் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது.
வதந்திகள் பரப்புவதைத் தடுப்பதற்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இதைச் செய்திருப்பதாக காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் கூறினார். இப்படி செய்ததால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிறைய உயிர்களைக் காக்க முடிந்திருக்கிறது எனவும் அவர் சொன்னார். அதே நேரத்தில் செல்போன், தரைவழி தொலைபேசி, இணையதளச் சேவை முடங்கி இருப்பது உள்ளூர் ஆங்கிலம் மற்றும் உருதுமொழி நாளேடு நிறுவனங்களை சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரில் இன்று மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு நேற்று தெரிவித்தது. இதன்படி, இன்று பள்ளிகள் திறந்த போதும், மாணவர்கள் வருகை இல்லை. பள்ளி ஆசிரியர்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகை தந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.