அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை தொடருகிறது – ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து அவரை சி.பி.ஐ. கைது செய்தது. அவருக்கு சி.பி.ஐ. காவல் நாளை (வெள்ளிக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அமலாக்கப்பிரிவுக்கு எதிராக ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். பின்னர் மனு மீதான விசாரணை புதன்கிழமையும் (நேற்று) தொடரும் என்று அறிவித்த நீதிபதிகள் அதுவரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தனர்.
அதன்படி நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.
அவர் வாதாடுகையில் கூறியதாவது:-
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் நடைபெற்ற ஒவ்வொரு சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான குற்றத்துக்கும் இரு பரிமாணங்கள் உள்ளன. அவை கணிக்கக்கூடிய குற்றம் மற்றும் சட்டத்துக்கு விரோதமான பண பரிமாற்றம். சட்டவிரோத பண பரிமாற்றம் என்பது கணிக்கக்கூடிய அல்லது திட்டமிடப்பட்ட குற்றத்தில் இருந்து தனித்து நிற்பதாகும்.
நாங்கள் அதிபுத்திசாலிகளை கையாள வேண்டியுள்ளது. முட்டாள் ஒருவர் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ய முடியாது. பண பரிமாற்றத்தை அடுக்கடுக்காக மறைக்கும் திறமை தேவைப்படுகிறது. இதுபோன்ற குற்றங்களை பின்தொடர்ந்து செல்வதும், ஆதாரங்களை சேகரிப்பதும் மிகவும் கடினமான செயலாகும்.
பெரும்பாலான ஆதாரங்கள் எலெக்ட்ரானிக் வடிவில் உள்ளன. இதை வெளியிட்டால் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு முன்பே அழிக்கப்பட்டு விடும். எனவே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் வரை அரசு தரப்பு இந்த ஆதாரங்களை பொதுவில் வெளியிட முடியாது. இது தொடர்பான ஆதாரங்களை மூடி ‘சீல்’ வைத்த உறையில் தாக்கல் செய்வதுதான் சட்டரீதியான வழிமுறையாகும்.
சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெறவேண்டி உள்ளது.
இதுபோன்ற வழக்குகளில், வெளிநாடுகளில் உள்ள சொத்துகளையும் முடக்குவதற்கு வழிமுறை உள்ளது. இந்த வழக்கிலும் வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கி இருக்கிறோம்.
ஒரு விசாரணை அமைப்பாக இந்த வழக்கில் கைது செய்யும் நிலையை அடைந்து இருக்கிறோம். குறிப்பிட்ட சில நிலையில் உள்ள அதிகாரிகள்தான், கைதுக்கு தேவையான காரணங்களை எழுத்துபூர்வமாக பதிவு செய்து விட்டு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய முடியும். இதுபோன்ற கைதுகளில் அரசியல் சட்டம் 20-வது பிரிவில் உள்ள உரிமைகள் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதுபோன்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகுதான் ஆதாரங்களை குற்றம் சாட்டப்பட்டவருக்கு தரமுடியும். குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதத்தில் கூறுவது போல, இது யாரையும் இழிவுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படவில்லை.
இவ்வாறு கூறிய துஷார் மேத்தா, சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ், ஆதாரங்களை தருவது தொடர்பாக உள்ள பிரிவுகளை கோர்ட்டுக்கு வாசித்து காட்டினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:-
வெளிநாடுகளில் உள்ள சொத்துகள், நிறுவனங்கள் குறித்து சில தகவல்களை அங்குள்ள வங்கிகள் அளித்து உள்ளன. இது தொடர்பாக கடிதங்களை அனுப்பி உள்ளோம். எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்து உள்ளன. சில சொத்துகள் தொடர்பாக தகவல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இதில் கோர்ட்டு தலையிட்டால், குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய எங்களுக்கு உள்ள சட்டரீதியான உரிமையை தடுப்பது ஆகிவிடும்.
எங்களிடம் உள்ள ஆதாரத்தை இப்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு தருவதில் இருந்து, கோர்ட்டு எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பு எங்களிடம் உள்ள ஆதாரத்தை குற்றம் சாட்டப்பட்டவருக்கு தர முடியாது. இவ்வாறு துஷார் மேத்தா கூறினார்.
அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் குறுக்கிட்டு, “நாங்கள் அந்த ஆதாரங்களை எங்களிடம் தருமாறு கேட்கவில்லை. இவர்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் கேள்விகள் எழுப்ப வேண்டும் என்றுதான் கேட்டோம்” என்றார்.
அப்போது நீதிபதி ஆர்.பானுமதி குறுக்கிட்டு, ஆதாரங்களை தங்களுக்கு தெரிவிக்காமல் நேரடியாக கோர்ட்டுக்கு தாக்கல் செய்வதைத்தான் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு கூறுகிறது என்றார்.
உடனே கபில் சிபல், “ஆதாரம் குறித்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு தெரிவிக்காமல் அதனை கோர்ட்டில் நேரடியாக தாக்கல் செய்வது பற்றிதான் கேள்வி எழுப்பினேன்” என்றார்.
ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான மற்றொரு வக்கீல் அபிஷேக் சிங்வி வாதாடுகையில், விசாரணைக்கு ப.சிதம்பரம் முழுஅளவில் ஒத்துழைப்பதாகவும், ஆனால் அமலாக்கப்பிரிவு அவரை கைது செய்ய முயற்சிப்பதாகவும் கூறினார்.
அதற்கு துஷார் மேத்தா, தங்களிடம் உள்ள ஆதாரங்கள் அசைக்க முடியாதவை என்றும், தாங்கள் தாக்கல் செய்த வழக்கு டைரியை மட்டும் பார்க்காமல் அதனுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் பார்க்க வேண்டும் என்றும் கூறி, அதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.
இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட தடையை இன்று (வியாழக்கிழமை) வரை நீடித்து உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை இன்றும் தொடரும் என்று அறிவித்தனர்.