கட்டாய ‘ஹெல்மெட்’ வழக்கு: போலீஸ் டி.ஜி.பி., மருத்துவக்கல்வி இயக்குனர் மீது நடவடிக்கை ஐகோர்ட்டு எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்து பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தீவிரமாக அமல்படுத்தவில்லை
மோட்டார் சைக்கிள் விபத்தில் தலையில் காயமடைந்து எத்தனை பேர் இறந்துள்ளனர்? என்று கேள்வி எழுப்பி, அதற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று மருத்துவக்கல்வி இயக்குனருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி உத்தரவிட்டோம். ஓராண்டு கடந்த பின்னரும் இதுவரை தாக்கல் செய்யவில்லை.
அதேபோல, ஹெல்மெட் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும் விதமாக, ஹெல்மெட் வழக்குகளை பதிவு செய்யும் அதிகாரத்தை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்க தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டோம். அந்த உத்தரவையும் இதுவரை தீவிரமாக அமல்படுத்தவில்லை.
விளக்கம் வேண்டும்
எனவே, இந்த ஐகோர்ட்டின் உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை? என்று தமிழக உள்துறை செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும். தலையில் காயம்பட்டு இறந்தவர்களின் விவரங்களை அறிக்கையாக ஏன் தாக்கல் செய்யவில்லை? என்பதற்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை பகுதி பகுதியாக அமல்படுத்துவோம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கிட்டத்தட்ட தமிழக அரசு 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளது. ஆனால் எந்த பயனும் இல்லை. சென்னை மாநகரில் மட்டும் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்துவிட்டு, மற்ற மாவட்டங்களை விட்டு விடுகின்றனர்.
டி.ஜி.பி.க்கு எச்சரிக்கை
இந்த ஐகோர்ட்டு கேள்வி கேட்கும்போதெல்லாம், சென்னையில் இத்தனை பேர் மீது ஹெல்மெட் அணியாததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரங்களை மட்டும் போலீசார் தாக்கல் செய்கின்றனர். ஆனால், மாநிலம் முழுவதும் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவில்லை. எனவே மாநிலம் முழுவதும் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
இந்த ஐகோர்ட்டு உத்தரவுகளை தீவிரமாக அமல்படுத்தாத தமிழக போலீஸ் டி.ஜி.பி., மருத்துவக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எச்சரிக்கை செய்கிறோம். இந்த வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 5-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.