Breaking News
‘ஜனாதிபதி ஆட்சிமுறையை நோக்கி இந்தியா செல்கிறது’ – மம்தா பானர்ஜி பரபரப்பு பேச்சு

இந்தியாவில் தற்போது பிரதமர் தலைமையிலான நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை உள்ளது. அமெரிக்காவிலும், சீனாவிலும் ஜனாதிபதி தலைமையிலான நாடாளுமன்ற ஆட்சி முறை உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் ஆட்சி முறையில் மாற்றம் வரும் என்று மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கோடிட்டுக் காட்டி உள்ளார்.

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் நிறுவன நாள் விழாவில் மம்தா பானர்ஜி நேற்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் ஜனாதிபதி ஆட்சி முறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை படித்த வகுப்பினருக்கும், மாணவர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இனி ஒரே தேர்தல், ஒரே தலைவர், ஒரே அரசியல் கட்சி, ஒரே நெருக்கடி நிலை என்ற நிலை வரும்.

அரசியல் கட்சிகளை குறிவைப்பதற்கு சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது. இன்றைக்கு அவர்கள் எனது சகோதரரை (விசாரணைக்கு) அழைத்து இருக்கிறார்கள். நாளை அவர்கள் என்னை அழைக்கலாம். நான் சிறைக்கு போகத்தயார். ஆனால் பாரதீய ஜனதா கட்சியின் இனவாத அரசியலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன்.

இனவாத அரசியல் என்னும் அபினுக்கு இளைஞர்கள் இரையாகி விடக்கூடாது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு உங்கள் ஆதரவு எனக்கு தேவை.

ஒன்று, எதிர்க்கட்சி தலைவர்களை மத்திய அரசு மிரட்டுகிறது அல்லது அவர்களை பணம் கொடுத்து வாங்குகிறது.

குதிரைப்பேரத்தின் மூலம் கர்நாடகத்தில் ஆட்சியைப்பிடித்துள்ள பாரதீய ஜனதாவின் அடுத்த குறி, மேற்கு வங்காளம்தான். அவர்கள் மேற்கு வங்காளத்தை பிடிக்க விரும்ப காரணம், நாம் அவர்களை எதிர்த்து போராடுகிறோம்; குரல் கொடுக்கிறோம் என்பதுதான். மேற்கு வங்காளத்தையும் பிடிப்போம் என்று அவர்கள் சொல்கிறார்கள். அது எப்படி நடக்கிறது என்பதையும் பார்ப்போம்.

எந்த விசாரணை அமைப்புக்கும் நாங்கள் பயப்படவில்லை.

மத்திய அரசின் எல்லா அமைப்புகளும் ஓய்வு பெற்றவர்களை தலைவர்களாகக் கொண்டு தான் இயங்குகின்றன. அவர்களுக்கு பொறுப்புடைமை கிடையாது. அவர்கள் அரசாங்கம் சொல்வதற்கெல்லாம் ஆமாம் என்று கூறிக்கொண்டு, அந்த உத்தரவுகளை பின்பற்றி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.