அதிகாரிகள் மெத்தனத்தால் உயிரிழப்பு: ஐகோர்ட் வேதனை
அதிகாரிகள் மெத்தனத்தால், பேனர் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், வைக்கப்பட்ட திருமண பேனர் ஒன்று இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மீது சரிந்தது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அப்பெண் மீது லாரி ஏறியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். பேனர், அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என லட்சுமி நாராயணன் என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டார்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், பேனர் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகள் மெத்தனமே காரணம். அரசியல் கட்சியினருக்கு விஸ்வாசமாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். உயிரிழப்புக்கு ரூ.2 லட்சம் கருணை தொகை தந்தால் பிரச்னை தீர்ந்து விடுவதாக நினைக்கின்றனர்.
எந்த கட்சி, ஆட்சிக்கு வந்தாலும், பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன. விதிமீறி பேனர் வைப்பதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் எல்லாம் அரசியல் ஆக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.