கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம் : பொன்.மாணிக்கவேல்
நெல்லை கல்லிடைக்குறிச்சியில் அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயிலில் இருந்து 1982-ம் ஆண்டு கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கிருந்து மீட்கப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை சென்னை கொண்டு வரப்படுகிறது என பொன்.மாணிக்கவேல் முன்னதாக தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து ரெயில் மூலமாக நடராஜர் சிலை சென்னை கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன். மாணிக்கவேல் கூறியதாவது:- ”சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே உள்ள தகவல் பரிமாற்றத்தில் தான் பிரச்சினை உள்ளது.
இந்த விவகாரத்தில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை, இன்னும் நிறைய சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது . அனுமதி அளித்தால் எல்லா சிலைகளும் மீட்கப்படும். ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்க உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி. நடராஜர் சிலை அங்குள்ள அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது, எந்த சிலையும் காட்சி பொருள் அல்ல. நாம் கும்பிடும் சிலைகள் வெளிநாட்டில் காட்சி பொருளாக வைக்கப்படுகின்றன.
விமானத்தில் கொண்டு வர பணம் இல்லாததால், ரெயில் மூலம் சிலையை கொண்டு வந்தோம். 37 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிலைகளை கண்டுபடித்து மீட்டு கொண்டு வந்துள்ளோம். கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம். சிலைக்கடத்தல் வழக்குகளுக்கு தனது குழு மற்றும் ஊடகங்களும் உதவியாக இருந்தன” இவ்வாறு அவர் தெரிவித்தார்.