உலக தடகள போட்டியில்சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீரர் பவெல் 4-வது முறையாக தங்கம் வென்றார்
உலக தடகள போட்டியின் சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீரர் பவெல் பாஜ்டெக் தொடர்ச்சியாக 4-வது முறையாக தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஒமார் தகுதி நீக்கம்
17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் இறுதி சுற்றில் நடப்பு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஜமைக்காவை சேர்ந்த ஒமார் மெக்லியோட் உள்பட 9 வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் முதலிடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒமார் மெக்லியோட் முதல் தடையை தாண்டிய போதே தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் அதனை சமாளித்து கொண்டு ஓடிய அவர் நிலை தடுமாறி தடைகளை எட்டி உதைத்ததுடன் ஓடுதளத்தில் கீழே விழுந்தார். இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அமெரிக்க வீரர் முதலிடம்
அமெரிக்க வீரர் கிராண்ட் ஹோலோவே 13.10 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை முதல்முறையாக தட்டிச்சென்றார். முன்னாள் உலக சாம்பியனான ரஷிய வீரர் செர்ஜி ஷூபென்கோவ் 13.15 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், ஐரோப்பிய சாம்பியனான பிரான்ஸ் வீரர் பாஸ்சல் மார்டினோட் லாகார்டி 13.18 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
4-வது முறையாக…
சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீரர் பவெல் பாஜ்டெக் 80.50 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை மீண்டும் தனதாக்கினார். 30 வயதான பவெல் பாஜ்டெக் உலக போட்டியில் தொடர்ச்சியாக 4-வது முறையாக (2013, 2015, 2017, 2019) மகுடம் சூடி பிரமிக்க வைத்திருக் கிறார்.
பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2 முறை ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து வீராங்கனை டினா ஆஷெர் சுமித் 21.88 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்ததுடன் முதல்முறையாக தங்கப்பதக்கத்தையும் சொந்தமாக்கினார்.