ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது- மதியத்துக்கு பிறகு முடிவு தெரியும்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது. சென்னை மாவட்டம் சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்து இருப்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை.
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு அமல்படுத்துவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை. மீதம் உள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற் கான தேர்தல் நடந்தது. முதல் கட்ட தேர்தலின் போது 76.19 சதவீதம் வாக்குகள் பதிவாயின. 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன.
தமிழகத்தில் உள்ள 315 மையங்களில், சுமார் 25 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பதிவான ஓட்டு சீட்டுகள் அடங்கிய அனைத்து வாக்குப்பெட்டிகளும் ‘சீல்’ வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறைகள் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் பொது வான வாக்கு எண்ணும் அறைக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தேர்தல் முடிவுகளை https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.