டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து பேட்டி
உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதன் பிறகு 7 தொடர்களில் வரிசையாக தோல்வியை தழுவினார். இந்த நிலையில் புத்தாண்டில் சாதிக்கும் வேகத்துடன் காத்திருக்கும் பி.வி.சிந்து நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
உலக பேட்மிண்டன் போட்டி உண்மையிலேயே எனக்கு சிறப்பானதாக அமைந்தது. அதன் பிறகு நடந்த சில போட்டிகளில் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தேன். ஆனாலும் மனம் தளரவில்லை. நேர்மறை எண்ணத்துடனேயே செயல்பட்டேன். எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியம் கிடையாது. சில நேரங்களில் நீங்கள் அற்புதமாக விளையாடலாம். சில நேரம் நீங்கள் தவறு செய்யலாம். இந்த தவறுகளில் இருந்து நிறைய கற்று இருக்கிறேன். பின்னடைவு ஏற்பட்டாலும் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருப்பதும், வலுவான வீராங்கனையாக மீண்டு வருவதும் தான் முக்கியம்.
என்னிடம் இருந்து எப்போதும் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நெருக்கடியும், விமர்சனங்களும் எனது ஆட்டத்திறனை பாதிக்காது. ஏனெனில், நான் களம் இறங்கும் போதெல்லாம் வெற்றி பெற வேண்டும் என்று தான் மக்கள் எப்போதும் எதிர்பார்ப்பார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது தான் உயரிய இலக்காக இருக்கும். தற்போது தொழில்நுட்பம் மற்றும் திறமையை மேம்படுத்துவதில் தொடர்ந்து கடினமாக உழைக்கிறேன். எல்லாவற்றையும் திட்டமிட்டு செயல்படுத்தினால், இந்த ஒலிம்பிக் சீசன் நன்றாக அமையும்.
ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியாவில் இருந்து மல்யுத்த வீரர் சுஷில்குமார் மட்டுமே இரண்டு பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றி அந்த வரிசையில் நானும் இணைவேன் (ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்) என்று நம்புகிறேன். மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு இன்னும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியமாகும்.
பேட்மிண்டனை பொறுத்தவரை இந்த 2020-ம் ஆண்டு சீசன் எளிதாக இருக்காது. ஜனவரி மாதத்தில் மலேசியா, இந்தோனேஷிய ஓபன் போட்டிகளில் இருந்து சவாலை தொடங்குகிறேன். சில தொடர்கள் ஒலிம்பிக்குக்கு தகுதி சுற்றாகவும் இருக்கிறது. அதனால் எல்லா தொடர்களும் எங்களுக்கு முக்கியமானதாகும்.
5-வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டியை (ஜனவரி 20 முதல் பிப்ரவரி 9 வரை) ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளும் வலுவானவை தான். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. எனவே ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. இந்த பேட்மிண்டன் லீக் இளம் வீரர்களை ஊக்கமூட்டுவதுடன் அவர்களுக்கு, முன்னணி வீரர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் உருவாக்கி கொடுக்கிறது.
இவ்வாறு சிந்து கூறினார்.
உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து பிரிமீயர் பேட்மிண்டன் லீக்கில் ஐதராபாத் ஹன்டர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.