Breaking News
டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் 4 இடங்களுக்குள் வருவோம் – இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் நம்பிக்கை

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடக்கிறது. ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற பிறகு அதற்கு தயாராவதற்கு எங்களுக்கு 9 மாதங்கள் கிடைத்துள்ளது. ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் காணும் வகையில் திட்டமிட்டு பயிற்சி மேற்கொள்கிறோம். பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தலைமையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கி விட்டோம். அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது அவசியம். இதை சரியாக செய்து விட்டால், திருப்திகரமான முடிவுகள் தானாகவே வந்து சேரும்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் (மொத்தம் 12 அணிகள் பங்கேற்பு) சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் 4 இடத்திற்குள் வர முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். அரைஇறுதிக்கு வந்து விட்டால், அதன் பிறகு எதுவும் நடக்கலாம்.

இந்த ஆண்டில் ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி போட்டியும் நடக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை இந்த பட்டத்தை வென்றுள்ள நாங்கள் அதை தக்கவைக்கும் முனைப்புடன் உள்ளோம். ‘ஹாட்ரிக்’ பட்டத்தை ருசித்தால் இனிமையான அனுபவமாக இருக்கும். ஆனால் நாங்கள் ஒவ்வொரு தொடராக கவனத்தில் எடுத்துக் கொள்வோம்.

2019-ம் ஆண்டில் எல்லாமே எங்களுக்கு நல்லபடியாகத் தான் அமைந்தது. ஒலிம்பிக்குக்கு தகுதி பெறுவது தான் எங்களது முக்கிய இலக்காக இருந்தது. அதை வெற்றிகரமாக எட்டி விட்டோம். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் ஒரு அணியாக முன்னேற்றம் கண்டிருக்கிறோம்.

உலக தரவரிசையில் இந்த ஆண்டு முழுவதும் 5-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது எங்களுக்கு உத்வேகம் அளித்தது. இதே போல் சில இளம் வீரர்கள் தங்களது முதலாவது சர்வதேச போட்டியில் விளையாடியதை பார்த்தோம். சர்வதேச தரத்திலான போட்டிகளில் நெருக்கடியை திறம்பட சமாளிக்கக்கூடிய அளவுக்கு திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதனால் அணி மேலும் வலுவடைந்துள்ளது. இது நிச்சயம் சாதகமான அம்சமாகும்.

இப்போது எங்களது உடனடி இலக்கு, ஆக்கி புரோ லீக் போட்டிகளில் அசத்த வேண்டும் என்பது தான். இதையொட்டி நேற்று முன்தினம் பயிற்சியாளரை சந்தித்து பேசினோம்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எதிர்கொள்ள உள்ள ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம் போன்ற அணிகளை வீழ்த்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினோம். இந்த போட்டி தான் ஒலிம்பிக்குக்கு தயாராவதற்கு முதற்படிகட்டாகும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.