தமிழகத்தில் 5-ந்தேதி வரை மழை பெய்யும்வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழகம் இருக்கிறது. எனவே கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சீபுரம், வேலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
அடுத்து வரும் 2 நாட்களை பொறுத்தவரையில் (இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இடைவெளி விட்டு ஓரிரு முறை மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரியில் வருகிற 5-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
செம்மஞ்சேரியில் அதிக மழை
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை செம்மஞ்சேரியில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கொளப்பாக்கம், நீலகிரி மாவட்டம் குன்னூர், சென்னை விமான நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு, சோளிங்கர், தாம்பரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், நுங்கம்பாக்கம், உத்திரமேரூர், மாமல்லபுரத்தில் தலா 2 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.