இந்தோனேசியாவில் உலகிலேயே மிகப்பெரிய பூ
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் உலகிலேயே மிகப்பெரிய பூ மலர்ந்துள்ளது. 4 அடி அகலத்திற்கு பிரமாண்ட தோற்றத்தில் உள்ள இந்த பூவுக்கு ரப்லேசியா அர்னால்டி என்று பெயர்.
உலகில் இதுவரை பூத்த மலர்களில் இதுவே மிகப்பெரியது என்று தாவரவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ரப்லேசியா அர்னால்டி பூக்கும் செடிகள் ஒட்டுண்ணி தாவர வகையை சேர்ந்தவை ஆகும். இந்த செடிகளுக்கு வேர்கள் இலைகள் எதுவும் கிடையாது. மற்றொரு தாவரத்தில் வளரும் இந்த செடிகளில் மலர்கள் மலர்ந்து வெளியே வரும் போது தான், அவை மற்றொரு தாவரத்தில் ஒட்டுண்ணியாக இருப்பதே தெரியவரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ரப்லேசியா அர்னால்டி உருவத்தில் பெரிதாக இருந்தாலும், அந்த பூவில் இருந்து அழுகிய இறைச்சியின் துர்நாற்றம் வீசும். எனவே இந்த மலர் பிணமலர் என்றும் அழைக்கப்படுகிறது.
அதேபோல் உலகிலேயே மிகப்பெரிய பூ என்ற பெருமையை கொண்டிருந்தாலும் இந்த பூவின் ஆயுட்காலம் ஒருவாரம்தான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.