ஜெயலலிதா வகுத்த பாதையில், முதல்வர் பழனிசாமி ஆட்சியை தொடர்கிறார் -கவர்னர் பாராட்டு
ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் (2020) முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.
கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.
தமிழக அரசின் திட்டங்கள் குறித்து கவர்னர் விளக்கம் அளித்தார். அப்போது கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* காவேரி – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை அரசு நிறைவேற்றும்.
* சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேலும் 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
* மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியின் அளவு குறைந்துள்ளது.
* திறமையான நிதி மேலாண்மைக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது.
* காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.
* மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் திட்டம் நிறைவேற்றப்படும்.
* நடப்பாண்டு இதுவரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.7,096 கோடி பெறப்பட்டுள்ளது.
* முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த பாதையில் ஆட்சியை தொடர்கிறார்.
* தமிழகத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காகவும், ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகவும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுகிறது.
* மத்திய அரசால் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 18 பெரிய மாநிலங்களுள் தமிழகம் அரசு நிர்வாகத்தில் முதலிடம் பிடித்திருப்பது நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் விஷயம்.
* ‘இந்தியா டுடே’ ஆய்விலும் தமிழக அரசு முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது. இந்த சாதனைகளுக்காக முதல்வர் பழனிசாமியை வாழ்த்துகிறேன்.
* ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. மற்ற 9 மாவட்டங்களுக்கும் நகராட்சிகளுக்குமான உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும்.