தொடர் போராட்டம் எதிரொலி: ஹாங்காங் சீன தூதர் நீக்கம்
ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் அங்கு பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. மக்களின் தொடர் போராட்டத்துக்கு அடிபணிந்த அரசு சர்ச்சைக்குரிய மசோதாவை நீக்கியது. ஆனாலும் சீனாவிடம் கூடுதல் ஜனநாயக உரிமை உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுத்தி ஜனநாயக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 6 மாதத்துக்கும் மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தால் ஹாங்காங்கில் அசாதாரண சூழ்நிலை நிலவிவருகிறது.
மேலும் இந்த போராட்டம் ஹாங்காங்கின் மத்திய அரசான சீனாவுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. போராட்டத்தை முடிவு கொண்டுவருவதற்கு சீன அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ஹாங்காங்குக்கான தனது தூதராக (தொடர்பு அலுவலக இயக்குனர்) இருந்து வந்த வாங் ஜிமினை சீனா அதிரடியாக பதவியில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக சீனாவின் ஷாங்சி மாகாணத்துக் கான கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் லூயோ ஹூனிங்கை அந்த பதவிக்கு நியமித்துள்ளது.
புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள சீன தூதர் லூயோ ஹூனிங் ஹாங்காங் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்வார் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.