Breaking News
2019-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் அதிக எண்ணிக்கையிலான கல்வீச்சு சம்பவங்கள்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்தது. அது முதல் ஜம்மு காஷ்மீரில் முன் எப்போடதும் இல்லாத வகையில் கட்டுப்பாடுகள் மற்றும் தகவல் தொடர்பு தடை செய்யப்பட்டது.

ஜம்முவை சேர்ந்த ரோஹித் சவுத்ரி என்பவர் தாக்கல் செய்த தகவல் உரிமை (ஆர்டிஐ) சட்ட விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக உள்துறை அமைச்சகம் வழங்கிய புள்ளி விவரங்களின்படி, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, 2019 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் அதிகபட்சமாக கல் வீசும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில், கல் வீசும் சம்பவங்களின் எண்ணிக்கை முறையே 1,412 மற்றும் 1,458 ஆக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் 30 வரை, இதுபோன்ற 1,996 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு (ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட மாதம்) 658 கல்வீசும் சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. இது ஆண்டின் மிக அதிகமாகும். முந்தைய ஜூலை மாதத்தில் இதுபோன்று 26 கல் வீசும் சம்பவங்கள் நடந்து உள்ளன.

நவம்பர் 19-ம் தேதி, 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் கல் வீசும் சம்பவங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனக்மல் கட்டாரா கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோது, 2019 ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை காவல்துறை பதிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை மக்களவையில் தெரிவித்த தகவலில் 551 வழக்குகள் கல் எறிதல் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பானது. அவற்றில் 190 வழக்குகள் ஆகஸ்ட் 5-க்கு பிறகு பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

விண்ணப்பத்திற்கு பதிலளித்த உள்துறை, 2019 ஜனவரி முதல் நவம்பர் வரை பயங்கரவாத வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 591 ஆக இருந்தது, அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் செப்டம்பர் மாதத்தில் 152-ஆக பதிவாகியுள்ளன என கூறி உள்ளது.

ஆகஸ்ட் 5-க்குப் பிறகு பயங்கரவாத வன்முறை சம்பவங்கள் குறைந்துவிட்டன என்று டிசம்பர் 3-ம் தேதி மக்களவையில் உள்துறையின் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்திருந்தது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அளித்த பதிலில் ஜனவரியிலிருந்து ஜூலை வரை பயங்கரவாத வன்முறை சம்பவங்கள் 282 ஆகவும், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை 309 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் காட்டுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரில் நிலைமை “கட்டுப்பாட்டில் உள்ளது” என்றும் வழக்கமான நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.