தனுஷ், மாரி செல்வராஜ் படத்துக்கு புது சிக்கல் – சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு !
கர்ணன் என்ற சிவாஜி கணேசன் நடித்த படத்தின் பெயரை தனுஷின் படத்துக்கு தலைப்பாக வைக்கக் கூடாது என சிவாஜி ரசிகர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இப்போது ஆரம்பிக்கும் புதுப்படங்களுக்கு பழைய வெற்றி பெற்ற படங்களின் தலைப்புகள் வைக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்திற்கு கர்ணன் என பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இப்போது அந்த பெயரை வைக்கக் கூடாது என சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இது சம்மந்தமாக தயாரிப்பாளர் தாணுவுக்கு அவர்கள் அனுப்பிய கடிதத்தில் ‘தங்கள் தயாரிப்பில் ‘கர்ணன்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாவதாகப் படித்தேன். வருத்தம் அளிக்கிறது. நடிகர் திலகத்தின் மகாபாரதக் ‘கர்ணன்’ திரைப்படப் பெயரை மீண்டும் பயன்படுத்துவது சரியல்ல. அதுவும் தங்களின் தயாரிப்பில் என்பது மிகுந்த வருத்தம். பெயரில் ஏதாவது இணைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல, நடிகர் திலகம் ரசிகர்களின் ஏகோபித்த கோரிக்கை. ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளனர்.
இதுபோல புது படங்களுக்கு பழைய படத்தின் பெயரை வைக்கும்போது இணையதளங்களில் பழைய படத்தின் தகவல்கள் எதுவும் வராமல் புதுப்படத்தினைப் பற்றிய விவரங்களே வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.