இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி எளிதில் வெற்றி
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. கவுகாத்தியில் நடக்க இருந்த முதலாவது ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்தியா-இலங்கை இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது.
இதில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு குணதிலகாவும், அவிஷ்கா பெர்னாண்டோவும் ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர். ஸ்கோர் 38 ரன்களை எட்டிய போது தொடக்க ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். அவரது பந்தில் பெர்னாண்டோ (22 ரன்) கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் குணதிலகா (20 ரன்) நவ்தீப் சைனியின் வேகத்தில் கிளன் போல்டு ஆனார்.
ஒரு கட்டத்தில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது 160 ரன்களை தாண்டக்கூடிய வாய்ப்பு தென்பட்டது. ஆனால் மிடில் வரிசையில் இந்திய பவுலர்கள் கொடுத்த குடைச்சலில் இலங்கை பேட்டிங் முற்றிலும் நிலைகுலைந்து போனது. பின்வரிசையில் விக்கெட் கீப்பர் குசல் பெரேரா (3 சிக்சருடன் 34 ரன்) தவிர மற்றவர்களின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 19-வது ஓவரில் எதிரணியின் 3 பேட்ஸ்மேன்களை காலி செய்தார். பும்ரா வீசிய கடைசி ஓவரில் வானிந்து ஹசரங்கா தொடர்ச்சியாக 3 பவுண்டரி ஓடவிட்டது அந்த அணிக்கு சற்று ஆறுதல் அளித்தது. அதன் பலனாக 140 ரன்களையும் கடந்தது.
20 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 142 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்திய தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர். காயத்தால் 4 மாத ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.
பின்னர் எளிய இலக்கை நோக்கி களம் புகுந்த இந்திய அணிக்கு லோகேஷ் ராகுலும், ஷிகர் தவானும் அட்டகாசமான தொடக்கத்தை ஏற்படுத்தி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். ராகுல் 45 ரன்களும் (32 பந்து, 6 பவுண்டரி), தவான் 32 ரன்களும் (29 பந்து, 2 பவுண்டரி) எடுத்தனர். அடுத்து ஸ்ரேயாஸ் அய்யரும், கேப்டன் விராட் கோலியும் ஜோடி சேர்ந்து இலங்கை பந்து வீச்சை சிதறடித்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் தனது பங்குக்கு 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 34 ரன்கள் திரட்டினார்.
மலிங்காவின் பந்து வீச்சில் ஒரு சிக்சரை விரட்டிய விராட் கோலி குமாராவின் ஓவரிலும் சிக்சர் விளாசி ஆட்டத்தை தித்திப்பாக முடித்து வைத்தார். இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விராட் கோலி 30 ரன்களுடன் (17 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். நவ்தீப் சைனி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி வருகிற 10-ந்தேதி புனேயில் நடக்கிறது.
இலங்கை
குணதிலகா (பி) சைனி 20
அவிஷ்கா பெர்னாண்டோ
(சி) சைனி (பி) வாஷிங்டன் 22
குசல் பெரேரா (சி)தவான் (பி)
குல்தீப் 34
ஒஷாடா பெர்னாண்டோ
(ஸ்டம்பிங்) பண்ட் (பி) குல்தீப் 10
பானுகா ராஜபக்சே (சி) பண்ட்
(பி) சைனி 9
ஷனகா (பி) பும்ரா 7
தனஞ்ஜெயா டி சில்வா (சி)
ஷிவம் துபே (பி) தாகூர் 17
ஹசரங்கா (நாட்-அவுட்) 16
உதனா (சி) சைனி (பி) தாகூர் 1
மலிங்கா(சி)குல்தீப்(பி)தாகூர் 0
லாஹிரு குமாரா (நாட்-அவுட்) 0
எக்ஸ்டிரா 6
மொத்தம் (20 ஓவர்களில்
9 விக்கெட்டுக்கு) 142
விக்கெட் வீழ்ச்சி: 1-38, 2-54, 3-82, 4-97, 5-104, 6-117, 7-128, 8-130, 9-130
பந்து வீச்சு விவரம்
பும்ரா 4-0-32-1
ஷர்துல் தாகூர் 4-0-23-3
நவ்தீப் சைனி 4-0-18-2
வாஷிங்டன் சுந்தர் 4-0-29-1
குல்தீப் யாதவ் 4-0-38-2
இந்தியா
லோகேஷ் ராகுல் (பி)
ஹசரங்கா 45
ஷிகர் தவான் எல்.பி.டபிள்யூ
(பி) ஹசரங்கா 32
ஸ்ரேயாஸ் அய்யர் (சி) ஷனகா
(பி) குமாரா 34
விராட் கோலி (நாட்-அவுட்) 30
ரிஷாப் பண்ட் (நாட்-அவுட்) 1
எக்ஸ்டிரா 2
மொத்தம் (17.3 ஓவர்களில்
3 விக்கெட்டுக்கு) 144
விக்கெட் வீழ்ச்சி: 1-71, 2-86, 3-137
பந்து வீச்சு விவரம்
மலிங்கா 4-0-41-0
லாஹிரு குமாரா 3.3-0-30-1
தனஞ்ஜெயா டி சில்வா 2-0-15-0
ஷனகா 4-0-26-0
ஹசரங்கா 4-0-30-2