காட்டுத்தீயால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தள்ளிப்போகுமா?
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் வருகிற 20-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் விக்டோரியாவின் கிழக்கே கிப்ஸ்லாண்ட் மண்டலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால் புகைமூட்டத்தால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. மெல்போர்னிலும் புகையால் காற்று மாசடைந்துள்ளதால் அங்கு திட்டமிட்டநாளில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்போட்டி தொடங்குமா அல்லது வேறு நாளுக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 7 முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், 2-ம் நிலை வீரரமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இது குறித்து தனது கவலையை ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இது போன்ற சூழலில் விளையாடும் போது வீரர்களின் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆஸ்திரேலிய ஓபனை தாமதமாக தொடங்குவதற்கு சாத்தியம் உள்ளதா என்பது குறித்து வீரர்கள், போட்டி அமைப்பாளர்கள் சந்தித்து ஆலோசிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய டென்னிஸ் சங்க தலைமை நிர்வாகி கிரேக் டிலே, திட்டமிட்டபடி இந்த போட்டி தொடங்கி நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.