‘நியூசிலாந்து மண்ணில் விளையாடுவது எளிதாக இருக்காது’ -ரோகித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு (ஜனவரி 24-ந்தேதி முதல் ஐந்து 20 ஓவர், மூன்று ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட்) விளையாட உள்ளது. நியூசிலாந்து, கிரிக்கெட் விளையாடுவதற்கு எளிதான இடம் கிடையாது. கடந்த முறை அங்கு சென்று விளையாடிய போது டெஸ்ட் தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்தோம். இருப்பினும் கடும் போராட்டம் அளித்தோம். தற்போது நம்மிடம் உள்ள பந்து வீச்சு தாக்குதல் முன்பை விட முற்றிலும் வித்தியாசமானது. அதனால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தனிப்பட்ட முறையில், எனக்கு நியூசிலாந்து மிகவும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எந்த ஒரு சீதோஷ்ண நிலையிலும், புதிய பந்தை எதிர்கொள்வது சுலபமில்லை. அதுவும் வெளிநாட்டில் ஆடுவது மிகவும் கடினமாக இருக்கும். அதே சமயம் சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டி கொண்ட தொடரில் ஆடியபோது, புனேயில் நடந்த டெஸ்டில் பந்து அதிகமாக ஸ்விங் ஆனது. இந்திய மண்ணில் இதற்கு முன்பு இந்த அளவுக்கு ஸ்விங் ஆனதை பார்த்ததில்லை. ஆனாலும் சமாளித்து ரன் குவித்தோம். எனவே நியூசிலாந்து மண்ணில் சூழல் நமக்கு சாதகமாக இருக்காது என்றாலும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
2019-ம் ஆண்டில், தொடக்க வீரராக மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 2,442 ரன்கள் குவித்து சாதனை படைத்தது குறித்து கேட்கிறீர்கள். இதை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. இதை விட ஒரு அணியாக சாதித்ததில் தான் எனக்கு மகிழ்ச்சியே. எந்த ஒரு தருணத்திலும் நான் தனிப்பட்ட சாதனைகளுக்கு முன்னுரிமை கொடுத்ததில்லை. சாதனை நல்ல விஷயம் தான். அதே நேரத்தில் ஒவ்வொரு தொடரையும் கைப்பற்றுவதில் தான் கவனம் செலுத்துகிறேன். நீங்கள் நன்றாக விளையாடினால், சாதனைகள் தானாக வந்து சேரும். முன்பை விட இப்போது எனது ஆட்டத்திறனை நன்கு புரிந்து கொண்டு விளையாடுகிறேன்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.