Breaking News
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டி முடிவில் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதன்படி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி (928 புள்ளிகள்) முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (911 புள்ளிகள்) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியதுடன் அந்த தொடரில் 549 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் (827 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரவரிசை இதுவாகும். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (814 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தை பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (793 புள்ளிகள்) 2 இடம் உயர்ந்து 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வீரர் புஜாரா (791 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 6-வது இடத்தையும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு இடம் சரிந்து (767 புள்ளிகள்) 7-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் ஜோரூட் (761 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், இந்திய வீரர் ரஹானே (759 புள்ளிகள்) 2 இடம் சரிந்து 9-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 5 இடங்கள் ஏற்றம் கண்டு 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் (904 புள்ளிகள்) முதலிடத்திலும், நியூசிலாந்து வீரர் நீல் வாக்னெர் (852 புள்ளிகள்) 2-வது இடத்திலும் தொடருகின்றனர். வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் (830 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்க வீரர் ரபடா (821 புள்ளிகள்) ஒரு இடம் குறைந்து 4-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் 2 இடம் முன்னேறி (796 புள்ளிகள்) 5-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

காயத்தில் இருந்து மீண்டு களம் திரும்பி இருக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (794 புள்ளிகள்) 6-வது இடத்தில் நீடிக்கிறார். கேப்டவுன் டெஸ்டில் 5 விக்கெட்டுகளை சாய்த்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (791 புள்ளிகள்) 5 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்தார். தென்ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் (786 புள்ளிகள்) 3 இடம் தளர்ந்து 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய வீரர்கள் ஆர்.அஸ்வின் (772 புள்ளிகள்) 9-வது இடத்திலும், முகமது ஷமி (771 புள்ளிகள்) 10-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 15 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 5 இடங்கள் எகிறி 14-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட்இண்டீஸ்) முதலிடத்திலும், ரவீந்திர ஜடேஜா (இந்தியா) 2-வது இடத்திலும், பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) 3-வது இடத்திலும், பிலாண்டர் (தென்ஆப்பிரிக்கா) 4-வது இடத்திலும், ஆர்.அஸ்வின் (இந்தியா) 5-வது இடத்திலும் உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.