20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் ஆச்சரியம் அளிக்கும் ஒரு பவுலர் இடம் பெறுவார் கேப்டன் கோலி தகவல்
இந்தூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இதில் இலங்கை நிர்ணயித்த 143 ரன்கள் இலக்கை இந்திய அணி 17.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. லோகேஷ் ராகுல் (45 ரன்), ஷிகர் தவான் (32 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (34 ரன்), கேப்டன் விராட் கோலி (30 ரன், நாட்-அவுட்) ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளித்தனர். இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி புனேயில் நாளை (வெள்ளிக் கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இது ஒரு மனநிறைவான செயல்பாடு. ஒவ்வொரு தொடரிலும் அணியை வலுப்படுத்தவே விரும்புகிறோம். ரோகித் சர்மா இல்லாத நிலையிலும் கூட நெருக்கடியின்றி வெற்றி கண்டிருக்கிறோம். வேகப்பந்து வீச்சாளா் நவ்தீப் சைனியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்பட்டு உள்ளார். பும்ரா, ஷர்துல் தாகூர் போன்ற அனுபவம் வாய்ந்த பவுலர்களுடன் இணைந்து இப்போது 20 ஓவர் கிரிக்கெட்டிலும் நன்றாக பந்து வீசுகிறார். உண்மையிலேயே அணிக்கு இது நல்ல அறிகுறியாகும்.
இலங்கை அணியில் நிறைய இடக்கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதனால் தான் இந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தரையும், குல்தீப் யாதவையும் தேர்வு செய்தோம். குல்தீப்பும், வாஷிங்டன் சுந்தரும் பந்தை இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் ஆப்-சைடுக்கு வெளியே நன்றாக வீசுவார்கள். எதிரணியில் வலதுகை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருந்தால் ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் சவாலாக இருப்பார்கள்.
ஒரு கேப்டன் என்ற முறையில், 20 ஓவர் கிரிக்கெட்டில் 5-க்கும் மேற்பட்ட பவுலர்கள் அவசியமாகும். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் எங்களது பவுலர்கள் உண்மையிலேயே அருமையாக பந்து வீசினர்’ என்றார்.
மேலும் விராட் கோலி கூறுகையில், ‘ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு செல்லும் இந்திய அணியில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு வீரர் தேர்வு செய்யப்படுவார் என்று நினைக்கிறேன். அவர் அதிவேகத்துடன் நன்கு பவுன்சர் செய்யக்கூடியவராக இருப்பார்.
வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா உள்ளூர் போட்டிகளில் பிரமாதமாக பந்து வீசி வருகிறார். இது மாதிரியான பந்து வீச்சாளர்களை கொண்டிருப்பது, அனைத்து வடிவிலான போட்டிகளிலும் பயன்படுத்திக் கொள்ள சவுகரியமாக உள்ளது. உலக கோப்பை போட்டியை எதிர்நோக்கும் போது, நம்மிடம் போதுமான பந்து வீச்சாளர்கள் உள்ளனர்’ என்றார்.
விராட் கோலி சுட்டிகாட்டிய பிரசித் கிருஷ்ணா கர்நாடகாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 23 வயதான பிரசித் கிருஷ்ணா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடியுள்ளார். 6 முதல்தர போட்டியில் ஆடி 20 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர் ஆகியோர் காயத்தால் ஒதுங்கி இருக்கும் நிலையில் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் அவசியம் என்பதை உணர்ந்து கோலி, பிரசித் கிருஷ்ணாவின் பெயரை குறிப்பிட்டு இருக்கிறார்.