ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி விரைவில் ஓய்வு பெறுவார் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
இந்திய மூத்த வீரர் டோனியிடம் அவரது எதிர்காலம் குறித்து விவாதித்தேன். அந்த விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது. மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடியவர் டோனி. அவரது முடிவுகளுக்கு நாம் மதிப்பு அளிக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் விரைவில் விடைபெற்று விடுவார். தற்போதைய அவரது வயதுக்கு அனேகமாக 20 ஓவர் வடிவிலான போட்டியில் விளையாட மட்டுமே விரும்புவார். எனவே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நிச்சயம் விளையாடுவார். அதன் பிறகு அவரது உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராவதற்கு ஐ.பி.எல். போட்டி நல்ல அடித்தளமாக இருக்கும். டோனிக்கு மட்டுமல்ல மற்ற வீரர்களுக்கும் ஐ.பி.எல். முக்கியமானதாகும்.
மிடில் விரிசையில் விளையாடும் வீரர்களுக்கு அனுபவமும், பார்மும் தேவையாகும். அவர்கள் 5, 6-வது வரிசையில் பேட்டிங் செய்வார்கள். எனவே ஐ.பி.எல்.-ல் அசத்தும் பட்சத்தில் அந்த இடத்துக்கான போட்டியில் (உலக கோப்பை அணியில்) டோனியும் இருப்பார். டோனியை பொறுத்தவரை அணியின் நலனுக்கே எப்போதும் முன்னுரிமை அளிப்பார். தன்னை அணியில் திணித்துக் கொள்ள ஒரு போதும் விரும்பமாட்டார். இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.
4 நாள் டெஸ்ட் போட்டி திட்டம் முட்டாள்தனமானது என்றும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பார்க்க அதிகமான ரசிகர்கள் வருகை தர வேண்டும் என்றால் டாப்-6 அணிகள் அடிக்கடி மோத வேண்டும் என்றும் ரவிசாஸ்திரி குறிப்பிட்டார்.
38 வயதான டோனி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் ஆடவில்லை என்பது நினைவு கூரத்தக்கது.