Breaking News
குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் போலீஸ் அதிகாரியை கொன்றவர்கள் பயங்கரவாதிகள் புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டை

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தமிழக-கேரள எல்லையில் சோதனைச்சாவடி ஒன்று உள்ளது.

இந்த சோதனைச்சாவடியில் களியக்காவிளை போலீசார் தினமும் பணியில் இருப்பது வழக்கம். களியக்காவிளை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான வில்சன் (வயது 57) நேற்று முன்தினம் இரவு அங்கு பணியில் இருந்தார்.

இரவு 9.30 மணி அளவில் திடீரென்று சோதனைச்சாவடிக்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதோடு, கத்தியாலும் வெட்டினர். துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் சோதனைச்சாவடியை நோக்கி ஓடிவந்தனர். அதற்குள் அந்த 2 பேரும் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். அங்கு வேறு யாரும் இல்லாததால், வில்சன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் வில்சனை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வில்சன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தமிழகத்திலும், கேரளாவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மற்றும் அதிகாரிகள் இரவே களியக்காவிளை சோதனைச்சாவடிக்கு சென்று கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், சுட்டுக்கொல்லப்பட்ட வில்சன் உடலை பார்வையிட்டு, அங்கிருந்த போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டு அறிந்தார். கொலையாளிகளை கண்டுபிடிக்க உடனே போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து குமரி மாவட்டம் முழுவதும் மட்டும் அல்லாமல், கேரள எல்லையிலும் போலீசார் நிறுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் திருவனந்த புரம் வந்தார். பின்னர் அவர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை செய்யப்பட்ட சோதனைச்சாவடிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதன்பிறகு மார்த்தாண்டம் பருத்தி விளையில் உள்ள வில்சனின் வீட்டுக்குச்சென்று வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி(52), மகள்கள் ரினிஜா(25), வினிதா(21) ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

அவருடன் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார், தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் ஆகியோர் சென்று இருந்தனர்.

சம்பவம் நடந்த இடம் தமிழக-கேரள எல்லை என்பதால் திருவனந்தபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. சஞ்சய்குமார், போலீஸ் ஐ.ஜி. அசோகன், நெய்யாற்றின்கரை துணை சூப்பிரண்டு அனில்குமார் ஆகியோரும் சோதனைச்சாவடிக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், 2 பேர் அங்குள்ள பள்ளிவாசல் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து மெயின் ரோட்டுக்கு வருவதும், அவர்கள் கையில் துப்பாக்கி, கத்தியுடன் சோதனை சாவடிக்குள் செல்வதும் பதிவாகி இருந்தது. பின்னர் அந்த 2 பேரும் சோதனை சாவடியை விட்டு வெளியே ஓடி அங்குள்ள குறுகலான தெரு வழியாக செல்வதும் பதிவாகி இருந்தது. இருவரும் தலையில் குல்லா வைத்துள்ளதும் தெரியவந்தது.

அந்த காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். கொலையாளிகள் 2 பேரும் கேரளாவுக்கு தப்பிச்சென்று இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதிய போலீசார், சோதனைச்சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அந்த மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன், கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் அவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

உடனே கேரள போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்து, அவர்களிடம் இருந்த பயங்கரவாதிகள் 2 பேரின் புகைப்படங்களை வெளியிட்டனர். அவர்களில் ஒருவர் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம் என்பதும், மற்றொருவர் நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபிக் என்பதும் தெரியவந்தது.

இவர்களை பற்றிய தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என்று கேரள போலீசார் அறிவித்து உள்ளனர்.

தமிழக உளவுப்பிரிவு போலீசாரும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

மத்திய உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் நேற்று களியக்காவிளை வந்து விசாரணை மேற்கொண்டார்.

இதற்கிடையே ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பருத்திவிளைக்கு கொண்டு செல்லப்பட்டது.

வில்சனின் உடலுக்கு டி.ஜி.பி. திரிபாதி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் வில்சனின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மற்றும் அதிகாரிகள் வில்சன் உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டியை தூக்கிச்சென்றனர். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அங்குள்ள சி.எஸ்.ஐ. ஆலய கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனின் மூத்த மகள் ரினிஜாவுக்கு திருமணமாகிவிட்டது. அவரது கணவர் ஜெர்லின் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகள் வினிதா மாற்றுத்திறனாளி ஆவார்.

இந்தநிலையில் கேரள போலீசார் வெளியிட்ட பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் பற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கேரள போலீசார் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ள அப்துல் சமீம், தவுபிக் இருவரும் நண்பர்கள் என்றும், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உடையவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்துல் சமீம் மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக போலீசாரால் தேடப்பட்டவர் ஆவார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் சமீம் தொடர்பாக தவுபிக் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சிலரை பெங்களூரு மற்றும் சென்னையில் போலீசார் கைது செய்தனர்.

அதற்கு பழிவாங்கும் விதமாக வில்சன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அப்துல் சமீம் சார்ந்துள்ள பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் கேரளாவில் இருப்பதாகவும், அவர்களிடம் கொலையாளிகள் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

அதன்படி கேரளாவில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.