ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: ஜோகோவிச்சின் ஆதிக்கம் நீடிக்குமா?
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி பிப்ரவரி 2-ந்தேதி வரை நடக்கிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், 7 முறை ஆஸ்திரேலிய ஓபனை வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), ‘நம்பர் ஒன்’ புயல் ரபெல் நடால் (ஸ்பெயின்), 6 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடின தரை போட்டியான இதில் சூப்பர் பார்மில் உள்ள ஜோகோவிச் பட்டம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது. அவர் முதல் சுற்றில் ஜான் லெனர்ட் ஸ்டிரப்பை (ஜெர்மனி) சந்திக்கிறார்.
தரவரிசையில் டாப்-10 இடத்தில் உள்ள டேனில் மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), பாப்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), மாட்டியோ பெரேட்டினி (இத்தாலி) ஆகியோரும் கடும் சவால் அளிக்கக்கூடியவர்கள் என்பதால் அதிர்ச்சி தோல்விகளுக்கு பஞ்சம் இருக்காது.
ஒற்றையர் பிரிவில் கால்பதிக்கும் ஒரே இந்தியரான தமிழகத்தை சேர்ந்த தரவரிசையில் 122-வது இடம் வகிக்கும் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் முதல் சுற்றில் 144-ம் நிலை வீரர் தட்சுமோ இட்டோவை (ஜப்பான்) சந்திக்கிறார். குணேஸ்வரன் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தால் 2-வது சுற்றில் ஜோகோவிச்சுடன் மோத வேண்டி வரலாம்.
பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் முன்னணி வீராங்கனைகள் வரிந்து கட்டுகிறார்கள். ‘நம்பர் ஒன்’ மங்கை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி முதல் சுற்றில் லெசியா சுரென்கோவை (உக்ரைன்) சந்திக்கிறார். சமீபத்தில் அடிலெய்டு டென்னிசில் கோப்பையை வென்ற ஆஷ்லி பார்ட்டி, ஆஸ்திரேலிய ஓபனை 42 ஆண்டுகளாக எந்த உள்நாட்டவரும் கிரீடம் சூடியதில்லை என்ற நீண்ட கால குறையை தணிக்கும் உத்வேகத்துடன் களம் காணுகிறார்.
இதே போல் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் வாகை சூடும் வாய்ப்பில் உள்ளார். அண்மையில் ஆக்லாந்து ஓபன் பட்டத்தை கைப்பற்றிய செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் ரஷியாவின் 18 வயதான அனடசியா போட்டாபோவாவை எதிர்கொள்கிறார். இந்த பட்டத்தை செரீனா சொந்தமாக்கினால், பெண்கள் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து விடுவார். நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா (அமெரிக்கா), விம்பிள்டன் சாம்பியனான சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஆகியோரும் எதிர்பார்ப்புக்குரிய வீராங்கனைகளாக கவனிக்கப்படுகிறார்கள். .
குழந்தை பெற்றதால் 2 ஆண்டுகள் ஒதுங்கி இருந்த இந்தியாவின் சானியா மிர்சா, ஹோபர்ட் போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்ததுடன் அதில் இரட்டையர் பிரிவில் பட்டமும் வென்று அசத்தினார். ஆஸ்திரேலிய ஓபனிலும் அவர் இரட்டையர் பிரிவில் நாடியா கிச்செனோக்குடன் (உக்ரைன்) கைகோர்த்து களம் இறங்குகிறார்.
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.348 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோர் தலா ரூ.20 கோடியை பரிசுத்தொகையாக அள்ளுவார்கள். இறுதி ஆட்டத்தில் தோற்போர் ரூ.10 கோடி பெறுவார்கள். முதல் சுற்றில் தோல்வி கண்டாலும் ரூ.44 லட்சம் பரிசு கிடைக்கும். இரட்டையர் பிரிவில் சாம்பியன் ஆகும் ஜோடிக்கு ரூ.3¾ கோடி வழங்கப்படும்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி மாலை வரை ஒற்றையர் ஆட்டங்கள் நடக்க உள்ளன. சோனி சிக்ஸ், சோனி டென்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.