காளையார்கோவில், திருமானூரில் ஜல்லிக்கட்டு:காளைகள் முட்டியதில் 2 பேர் பலிதண்டவாளத்தில் ஓடிய காளை ரெயிலில் அடிபட்டு சாவு
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கண்டுப்பட்டி கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழா நேற்று காலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மதியம் 2 மணியளவில் கிராம பெரியவர்கள் கோவில் காளையுடன் மஞ்சுவிரட்டு தொழுவத்தை சுற்றி வந்ததை தொடர்ந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 120-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்பட்டதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களில் 61 பேர் மாடுகள் முட்டியதில் காயமடைந்தனர்.
ஒருவர் பலி
மஞ்சுவிரட்டை காண வந்திருந்த திருப்பத்தூர் அருகே கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயராகவன் (வயது 44) என்பவரை சீறிப் பாய்ந்த மாடு ஒன்று முட்டி வீசியது. இதில் கழுத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று கண்டுப்பட்டி அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி உயிரிழந்தது.
ஜல்லிக்கட்டு
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கோக்குடி கிராமத்தில் புனித அந்தோணியார் கோவில் பொங்கலை முன்னிட்டு நேற்று புனித இஞ்ஞாசியார் ஆலய திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து காலை 7.45 மணி அளவில் ஆலயத்தின் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டது. சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன.
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 16 பேரும், மாடுபிடி வீரர்கள் 20 பேரும், மாட்டின் உரிமையாளர் ஒருவரும் என மொத்தம் 37 பேர் காயமடைந்தனர். பலத்த காயம் அடைந்த 8 பேர் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒருவர் சாவு
மேலும் லால்குடியை சேர்ந்த மகபூப்பாஷா மகன் ஒஜிரான்(25) என்பவரை மாடு முட்டியதில் வயிற்றின் மேல் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவருக்கு அருகில் இருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றபோது, பரிதாபமாக உயிரிழந்தார்.