தோனி இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் பங்கேற்பார் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்
* இந்திய மூத்த கிரிக்கெட் வீரர் டோனி, கடந்த 6 மாதங்களாக எந்த சர்வதேச போட்டியிலும் ஆடவில்லை. இதனால் இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். அவர் விரைவில் ஓய்வு பெறலாம் என்று அவ்வப்போது தகவல்கள் கசிந்தாலும் அது குறித்து வாய்திறக்காமல் மவுனம் சாதிக்கிறார். 38 வயதான டோனி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஒப்பந்த பட்டியலில் இருந்து கழற்றி விடப்பட்டதால் டோனி சென்னை அணியில் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இது பற்றி தெளிவுப்படுத்தியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன், ‘டோனி எவ்வளவு காலம் விளையாடுவார்? என்று மக்கள் பேசுகிறார்கள். டோனி நிச்சயம் விளையாடுவார். இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் பங்கேற்பார். அத்துடன் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தின் போது அவரை மீண்டும் தக்க வைத்துக் கொள்வோம். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்’ என்று குறிப்பிட்டார்.
* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்றிரவு ஜாம்ஷெட்பூரில் நடந்த 63-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வென்றது.
* ரோம் ரேங்கிங் சீரிஸ் சர்வதேச மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியாவும், 61 கிலோ பிரிவில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியாவும் தங்கம் வென்று அசத்தினர்.
* போர்ட்எலிசபெத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 209 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி ‘பாலோ-ஆன்’ ஆனது. இங்கிலாந்து பாலோ-ஆன் வழங்கியதால் 290 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 4-வது நாள் முடிவில் 62 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்து, தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது. இந்த டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெறுவது ஏறுக்குறைய உறுதியாகி விட்டது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.