அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்பப்பெற அனுமதி கேட்ட விஜயகாந்துக்கு ஐகோர்ட்டு கண்டனம்
தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, அவரையும், அமைச்சர்களையும் விமர்சனம் செய்து பேசியதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் மீது மொத்தம் 41 கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்ததை தொடர்ந்து, 37 வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்றது. மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியதாக விஜயகாந்த் மீது தேனி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
திரும்பப்பெற அனுமதி
இந்த வழக்கு முதல்-அமைச்சர் சார்பில் மாவட்ட தலைமை குற்றவியல் வக்கீல் மூலம் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் விஜயகாந்த் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டார். மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து விஜயகாந்த் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த் சார்பில் வக்கீல் வி.டி.பாலாஜி ஆஜராகி, ‘அவதூறு வழக்குகள் தொடர்பான சட்டப்பிரிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளதால் இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்பப்பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்தார்.
நீதிபதிகள் கண்டனம்
அதற்கு கடுமையாக ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள், ‘இந்த மனுவில் அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கூறிவிட்டு தற்போது வழக்கை திரும்பப்பெற அனுமதி கோருவது என்பது நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது. இதற்கு அபராதம் விதிக்கலாம்‘ என்று கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர், ‘எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த விஜயகாந்த் பேசிய பேச்சுக்களும் அவதூறு வழக்கு தொடருவதற்கு முகாந்திரமிக்கதாகவே உள்ளன. இந்த வழக்கை தாக்கல் செய்யும்போதே அனைத்து விவரங்களையும் பரிசோதித்தபிறகு தானே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொண்டதால் இந்த வழக்கில் அபராதம் விதிக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இதுபோல செயல்படக்கூடாது‘ என்று எச்சரிக்கை செய்தனர். பின்னர், வழக்கை திரும்பப்பெற மனுதாரர் தரப்புக்கு அனுமதியும் வழங்கி உத்தரவிட்டனர்.