முதல் பந்தில் இருந்தே நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுப்போம் – கேப்டன் விராட்கோலி பேட்டி
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனை அடுத்து இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி பெங்களூருவில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு சென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்ற பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த ஆண்டு நியூசிலாந்தில் நாங்கள் விளையாடிய விதம் (20 ஓவர் போட்டியில் 1-2 என்ற கணக்கில் தோற்ற இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது) எங்களுக்கு நிறைய நம்பிக்கையை அளித்துள்ளது. நாங்கள் விளையாடிய விதம் பல்வேறு சாதகமான அம்சங்களை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு போன்று இந்த முறையும் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும். வெளிநாட்டு மண்ணில் உள்ளூர் அணிக்கு நெருக்கடி அளிக்கும் போது மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.
உள்ளூரில் தொடரை வெல்வது ஒருவிதமான மகிழ்ச்சி தான். எங்களது முதல் தர ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது எதிரணிக்கு நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்த முடியும். கடந்த ஆண்டில் நாங்கள் நியூசிலாந்து தொடரில் இந்த மாதிரி நெருக்கடி அளித்தோம். மிடில் ஓவர்களில் நெருக்கடி அளித்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம். சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் நியூசிலாந்து அணிக்கு முதல் பந்தில் இருந்தே நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறோம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டியிலும் நெருக்கடிக்கு மத்தியில் வெற்றி கண்டோம். இந்த வெற்றி எங்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் எல்லா ஆட்டங்களிலும் நாம் ‘டாசை’ இழந்தாலும் சூழ்நிலைக்கு தகுந்தபடி சிறப்பாக விளையாடினோம். கடந்த 8 மாதங்களில் இளம் வீரர்கள் கண்டு வரும் ஏற்றம் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாகும்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நாம் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றும் தொடரை இழந்தோம். கடந்த முறையை விட ஆஸ்திரேலிய அணி தற்போது வலுவானதாக உள்ளது. சிறப்பாக விளையாடினால் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியும் என்று நினைத்தோம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி வரை நம்பிக்கையுடன் தீவிரமாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். அதனை நாங்கள் சரியாக செய்தோம். இவ்வாறு விராட்கோலி கூறினார்.
தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எப்பொழுதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரரான விராட்கோலி இந்திய அணிக்கு கிடைத்து இருக்கிறார். ரோகித் சர்மா எப்பொழுதும் உலகின் டாப்-5 பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இருவரும் இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். தற்போதைய இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பெரிய போட்டிகளில் தங்கள் பங்களிப்பை நேர்த்தியாக அளித்து வருகிறார்கள். ஷிகர் தவான் இல்லாத நிலையிலும் ரோகித் சர்மா, விராட்கோலி ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி பெரும்பாலான ரன்களை சேர்த்தது தரமானதாகும்.
கடந்த 2 போட்டியிலும் கணிசமான கடைசி கட்ட ஓவர்களில் எங்களது பவுலர்கள் தான் பேட்டிங் செய்ய வேண்டியதானது. அது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ராஜ்கோட் போட்டியில் லோகேஷ் ராகுலின் ஆட்டம் எங்களுக்கு பாதகத்தை விளைவித்தது. பெங்களூரு போட்டியில் கடைசி 10 ஓவர்களில் 63 ரன்கள் மட்டுமே சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்தது எங்கள் தோல்விக்கு காரணமாகும். கடந்த 2 போட்டியிலும் இந்திய அணியின் கடைசி கட்ட பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது. முகமது ஷமி, நவ்தீப் சைனி, பும்ரா ஆகியோர் நன்றாக பந்து வீசி நெருக்கடி அளித்தனர்.
பெங்களூரு ஆடுகளத்தின் தன்மை நாங்கள் எதிர்பார்த்தது போல் இல்லை. நாங்கள் எதிர்பார்த்ததை விட மெதுவாக இருந்தது. ‘டாஸ்’ வென்று நாங்கள் பேட்டிங் செய்ததற்கு பதிலாக பந்து வீச்சை தேர்வு செய்து இருக்க வேண்டும். அனைத்து சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். புதிய பந்தில் பந்து வீசுகையில் சற்று மெதுவாக பந்து வந்தது. பனியின் தாக்கம் காரணமாக பந்தை பிடித்து வீசுவது சிரமமாக இருந்தது. அறிமுக வீரராக களம் இறங்கிய லபுஸ்சேன் இந்திய அணியின் தரமான பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினார். இவ்வாறு அவர் கூறினார்.