Breaking News
ரஞ்சி கிரிக்கெட்டில் ரெயில்வேயை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழ்நாடு-ரெயில்வே (பி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. முதலில் ஆடிய ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 39.1 ஓவர்களில் 76 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து இருந்தது. தினேஷ் கார்த்திக் 57 ரன்னுடனும், பாபா இந்திரஜித் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 91 ஓவர்களில் 330 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. தினேஷ் கார்த்திக் 58 ரன்னும், பாபா இந்திரஜித் 58 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ரெயில்வே அணி தரப்பில் ஹர்ஷ் தியாகி 5 விக்கெட்டும், அவினாஷ் யாதவ் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

254 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ரெயில்வே அணி, தமிழக வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 36.4 ஓவர்களில் 90 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் தமிழக அணி 2-வது நாளிலேயே இன்னின்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டும், ஆர்.அஸ்வின் 3 விக்கெட்டும், நடராஜன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். சதம் அடித்த தமிழக வீரர் அபினவ் முகுந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார். 6-வது ஆட்டத்தில் விளையாடிய தமிழக அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

மும்பையில் நடந்து வரும் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த உத்தரபிரதேச அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய உத்தரபிரதேச அணி முதல் இன்னிங்சில் 159.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 625 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அக்‌ஷ்தீப் நாத் 115 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். உபேந்திரா யாதவ் 203 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய மும்பை அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

பெங்கால்-ஐதராபாத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) மேற்கு வங்காளத்தில் உள்ள கல்யானியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் எடுத்து இருந்தது. மனோஜ் திவாரி 156 ரன்களுடன் களத்தில் இருந்தார். 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 151.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 635 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 34 வயதான மனோஜ் திவாரி 414 பந்துகளில் 30 பவுண்டரி, 5 சிக்சருடன் 303 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். முதல் தர போட்டியில் மனோஜ் திவாரி அடித்த முதல் முச்சதம் இதுவாகும். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஐதராபாத் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.