டோக்கன் வாங்கி 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்து கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல்
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்ய டோக்கன் வாங்கி 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுதாக்கலை தடுக்க பாரதீய ஜனதா கட்சி சதி செய்ததாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர்.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் ஊர்வலமாக சென்றபோது, ஊர்வலத்தில் திரண்ட கூட்டத்தினால் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாததால், அவரால் மனுதாக்கல் செய்ய முடியவில்லை.
மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்வதற்காக டெல்லி ஜம்நகர் அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அப்போது மனு தாக்கல் செய்தவற்காக ஏராளமானவர்கள் வரிசையில் நின்றனர்.
இதனால் பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்தவற்காக வரிசையில் நின்றவர்களுக்கு அதிகாரிகள் டோக்கன் வழங்கினார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 45 எண் டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் அவர் 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்து அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக காத்திருக்கிறேன். எனது டோக்கன் எண் 45. ஏராளமானவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நிற்கிறார்கள். ஜனநாயகத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
இதுகுறித்து துணை முதல்-மந்திரி மணீஸ் சிசோடியா தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில், “பாரதீய ஜனதா எவ்வளவு சதி செய்தாலும் கெஜ்ரிவால் தனது மனுவை தாக்கல் செய்வதில் இருந்தும் அவர் 3-வது முறையாக முதல்-மந்திரியாவதில் இருந்தும் உங்களால் தடுக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.
கெஜ்ரிவாலை எதிர்த்து டெல்லி தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் சுனில்யாதவும், காங்கிரஸ் சார்பில் ரமேஷ்சகஹர்வாலும் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
தேர்தல் முடிந்து டெல்லி சட்டசபை தேர்தல் ஒட்டு எண்ணிக்கை 11-ந் தேதி நடக்கிறது.