சீண்டிய சீனா, பதிலடி தந்த இந்தியா
இந்திய-சீன வீரர்கள் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில்மிகப்பெரிய மோதல் நடந்து உள்ளது. நமது தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 1962-ம் ஆண்டு நடந்த இந்தியா-சீனா போருக்கு பின் நடந்த மிகப்பெரிய மோதலாக இது பார்க்கப்படுகிறது. இருப்பினும் சீனாவின் அத்துமீறலுக்கு முதல் முறையாக இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது.
போருக்கு பின் சீனா இதுவரை பல நூறு முறை இந்திய எல்லைக்குள் வந்து நமது வீரர்களை சீண்டி சென்று உள்ளது. இந்த சீண்டலுக்கு காரணம், இந்திய வீரர்களை அவர்கள் பலவீனமாக நினைத்தது தான். ஆனால் இந்த முறை இந்தியா தந்த பதிலடியால் சீனா தற்போது திகைத்து நிற்கிறது.
சீனா ஏன் தொடர்ந்து எல்லை தாண்டி வந்து இந்தியாவை சீண்டி வருகிறது என்பதனை பார்ப்பதற்கு முன்பு நமக்கும், சீனாவிற்கும் உள்ள எல்லை பிரச்சினைகளை தெரிந்து கொள்வது அவசியம்.
பண்டைய காலம் முதல் சீனாவிற்கு மிகுந்த நட்பு நாடாகத்தான் இந்தியா விளங்கி வந்தது. இருநாடுகள் இடையே போர் நடந்ததாக வரலாற்று தரவுகள் இல்லை. ஆனால் அதே நேரத்தில் இருநாடுகளும் வணிகத்தில் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டன. காலம், காலமாக எல்லைதாண்டி நீடித்து வந்த இந்த நட்பு, 19-ம் நூற்றாண்டு முதல் எல்லை பிரச்சினை மூலம் விரிசல் விழ தொடங்கியது.
இந்தியாவும்-சீனாவும் 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் தூரமுள்ள எல்லையை தற்போது பகிர்ந்து உள்ளன. யூனியன் பிரதேசமான லடாக், மற்றும் இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த எல்லைகள் உள்ளன. அதில் இமாசல் மற்றும் உத்தரகாண்ட் தவிர மற்ற பகுதிகளில் உள்ள எல்லைகளில் சீனா தொடர்ந்து பிரச்சினை செய்கிறது. கடந்த 1914-ம் ஆண்டு திபெத்தும்-ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவும் எல்லை தொடர்பாக மெக்மோகன் கோடு உடன்படிக்கை ஒன்றை செய்தன. இந்த உடன்படிக்கை தான் அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகியவற்றில் இந்தியாவின் எல்லை எதுவரை என்பதனை உறுதி செய்தது.
ஆனால் திபெத், சீனாவின் ஒரு அங்கமாக உள்ளது. இந்த ஒப்பந்தம் போட திபெத் நிர்வாகத்திற்கு அதிகாரம் கிடையாது. எனவே திபெத்தின் பகுதியான சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் எங்களுக்கே சொந்தம் என்று சீனா இப்போது வரை சொல்லி வருகிறது.
அடுத்ததாக லடாக் பகுதி. சுதந்திரம் பெற்ற பிறகு ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஜம்முவின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்தது. அது தான் தற்போதைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று சொல்கிறோம்.
அதே போல் சீனாவும், ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. அது தான் அக்சய்சின். இந்த இடம் தான், கடந்த 1962-ம் ஆண்டு நடந்த இந்திய-சீனா போருக்கு அடித்தளம் அமைத்தது. போருக்கு பின் அக்சய்சின், முழுவதையும் சீனா தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது.
எனவே தான் அக்சய்சின் அருகில் உள்ள இந்த பகுதிகளில் தொடர்ந்து எல்லை பிரச்சினை ஏற்படுகிறது. எல்லை பிரச்சினைக்கு மிக மற்றொரு காரணம் எல்லை என்று வரையறுக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் பனி மலைகள் மற்றும் ஆறுகளாக உள்ளன. இது சீனாவின் அத்துமீறலுக்கு மிகுந்த வசதியாக உள்ளது. அடிக்கடி இந்திய எல்லைக்குள் நுழையும் சீன வீரர்களை இந்திய படையினர் தடுத்தி நிறுத்தி அனுப்பி விடுவார்கள்.
இந்திய-சீன எல்லை பகுதிகளில் சீனா பல்வேறு கட்டுமானப்பணிகளை முடித்து உள்ளது. இதுவரை எல்லைப்பகுதிகளில் மட்டும் 42 விமான நிலையங்களை கட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக திபெத் எல்லை அருகே மிகப்பெரும் விமான நிலையத்தை சீனா கட்டி உள்ளதாகவும், அது அனைத்து வானிலையின் போதும் செயல்படும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இதுதவிர எல்லைகளில் சாலை போக்குவரத்தையும் சீனா நன்றாக மேம்படுத்தி உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை தற்போது அதிக அளவில் சாலை பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதன்காரணமாக டோக்லாம் மற்றும் கல்வான் பகுதிகளில் பிரச்சினை ஏற்பட்டது. அதாவது தனது எல்லை பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்திய சீனா கூறுவது என்னவென்றால், இந்தியா தனது எல்லை பகுதியில் எந்த பணியும் எல்லையில் மேற்கொள்ள கூடாது என்பதுதான்.
ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அனைத்து பணிகளும் இந்திய எல்லைக்குள் நடக்கிறது. எனவே இதில் சீனா தலையிடக்கூடாது என்பது இந்தியாவின் வாதமாக உள்ளது. இதனை சீனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் எல்லை தாண்டி வந்து இந்தியாவிற்கு தொல்லை கொடுக்கிறது.
இந்த தொல்லைக்கு இந்தியா கொடுத்த பதிலடியால் தற்போது சீனா மவுனம் காக்கிறது. கொரோனா விவகாரத்தில் உலக நாடுகளின் நம்பிக்கையை இழந்த சீனா, இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் அடுத்த என்ன செய்யப்போகிறது என்பதை அறிய அனைத்து நாடுகளின் புருவத்தை உயர்த்தி உள்ளன. தற்போதைய நிலையில் சீனா, இந்தியாவுடன் எந்த மோதல் போக்கையும் கடைப்பிடிக்காது என்றே வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் சீனா ஏதாவது சில்மிஷம் செய்தால் அதனை முறியடிக்கும் திறன் இந்தியாவிற்கு இருக்கிறதும் என்றும் அவர்கள் சொல்கின்றனர்.
துப்பாக்கி பயன்படுத்தாதது ஏன்?
சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நமது ராணுவ வீரர் ஒருவர் கூறியதாவது:-
எல்லையில் சீன வீரர்கள் அடிக்கடி அத்துமீறுவது வழக்கம். ஆனால் அப்போது அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் வரிசையில் நின்று, இது எங்கள் பகுதி, உள்ளே வரக்கூடாது என்று தடுப்பார்கள். அப்போது வாக்குவாதம் ஏற்படும். அதன்பின் சீன வீரர்கள் திரும்பி சென்று விடுவார்கள். அன்றைய தினம் கல்வான் பகுதியில் முகாமிட்டுள்ள இருநாட்டு படைகளும் திரும்பி செல்வது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இது போன்று உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் இருநாட்டு வீரர்களும் திரும்பி செல்ல வேண்டும். ஆனால் அன்று சீன வீரர்களில் 10 சதவீதம் பேர் முகாம் அமைத்தனர். உடனே இந்திய வீரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது முதலில் சீன வீரர்கள் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் தொடங்கினர். ஒருவருக்கு ஒருவர் பலமாக கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கினர். அருகில் ஆறு இருந்ததால் சிலர் ஆற்றில் தள்ளிவிடப்பட்டனர். சுமார் 6 மணி மோதலுக்கு பின் அங்கு அமைதி நிலவியது. இருநாட்டு ஒப்பந்தப்படி எல்லைக்கோடு அருகே ஆயுதம் பயன்படுத்தக்கூடாது என்பதால் வீரர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதத்தை பயன்படுத்தாமல் சண்டையிட்டனர். ஒருவேளை சீன வீரர்கள் ஆத்திரத்தில் துப்பாக்கி எடுத்து இருந்தால், அதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து இருக்கும் என்று அவர் கூறினார்.
கல்வான் பள்ளத்தாக்கும், பட்டுச்சாலையும்…
பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரிகட்டும் என்பார்கள். அது போல இந்தியா நமது நாட்டில் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் சீனாவை எரிச்சலைடைய செய்கிறது. மிக முக்கியமாக சீனா ஆக்கிரமித்துள்ள நமது அக்சய் சின் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் மீட்கப்படும் என்று இந்தியாவின் குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. இது சீனாவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதே போல் காஷ்மீரில் 370-வது பிரிவை நீக்கி லடாக் பகுதியை யூனியன் பிரதேமாக அறிவித்ததை சீனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சீனா தனது பொருட்களை உலக அளவில் எளிதில் சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பட்டுச்சாலை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது சீன அதிபர் ஜின்பிங்கின் கனவு திட்டமாகும். சீனாவை ஆப்பிரிக்கா, அரேபியா, ஐரோப்பிய நாடுகளுடன் இணைப்பது தான் இந்த வழித்தடம். பண்டைய சீனர்கள் பட்டு வணிகத்திற்காக பயன்படுத்திய பாதைக்கு தற்போது சீனா உயிர் கொடுத்து வருகிறது. திபெத்தில் தொடங்கும் இந்த சாலை கல்வான் பள்ளதாக்கு வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீருக்கு செல்கிறது. எனவே கல்வான் பகுதி சீனாவிற்கு மிகவும் முக்கியமாக தெரிகிறது. எனவே தான் அந்த பகுதியை முழு அளவில் ஆக்கிரமிக்க இந்தியாவுடன் பிரச்சினை செய்கிறது. ஆனால் கல்வான் பகுதி முழுவதும் இந்தியாவிற்கு சொந்தம் என்பதால் அங்கு எந்த பணியும் மேற்கொள்ள கூடாது என்று இந்தியா சொல்கிறது. இந்தியாவின் இந்த தடையால் பட்டுச்சாலை திட்டத்தில் சீனாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் குள்ளநரித்தனமும், இந்தியாவின் ராஜதந்திரமும்…
ஆசிய பிராந்தியத்தில் சீனாவுக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. தன்னுடைய வளர்ச்சி மட்டும் போதும், இந்தியா வளரக்கூடாது என்பதில் சீனா முனைப்போடு செயல்படுகிறது. இந்தியாவிற்கு எதிராக தீவிரவாத தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு சீனா பக்கபலமாக உள்ளது. ஐ.நா. சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு எந்த காரணமுமின்றி தற்போது வரை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
காஷ்மீர் மக்கள் சீனா விசா கேட்டு விண்ணப்பித்தால் அவர்களை இந்தியர்கள் என்று சீனா அங்கீகரிக்க மறுக்கிறது. அருணாசல பிரதேசத்திற்கு நமது பிரதமர் சென்றால் கூட அது தவறு என்று அறிக்கை கொடுக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, பட்டுச்சாலை திட்டத்திற்காக சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது.
சீனாவின் இது போன்ற குள்ளநரி நடவடிக்கைகளுக்கு இந்தியாவும் ராஜதந்திரமாக தொடர்ந்து பதிலடி தருகிறது. சீனாவின் பிடியில் உள்ள திபெத்தின் சுதந்திரத்திற்காக போராடும் தலாய்லாமை இந்தியா தொடர்ந்து கவுரப்படுத்தி சீனாவுக்கு தலைவலி தருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா மேற்கொள்ளும் சாலை பணிகளுக்கு பதிலடியாக, தென்சீன கடல் பகுதியில் சீனா-வியட்நாம் இடையே பிரச்சினை உள்ள கடல் பகுதியில் இந்தியா தனது எண்ணெய் கிணறுகளை அமைக்கிறது.
அருணாசல பிரதேசம் இந்தியாவின் அங்கம் என்பதனை உறுதிப்படுத்தி கொள்ள முன்பு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தொடர்ந்து அருணாசல பிரதேச மேல்சபையில் இருந்து மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். சீனாவின் எதிரிகளான ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகளுடன் இந்தியா இணக்கமான நட்பை பேணி வருகிறது.