Breaking News
பிரதமர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தி.மு.க. துணை நிற்கும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சீனா உடனான லடாக் எல்லை மோதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று காணொலிக்காட்சி மூலமாக அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-

முதலில், எல்லையில் இறுதிவரை போராடி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ள அனைத்து இந்திய ராணுவ வீரர்களுக்கும், வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தனது இன்னுயிரை தியாகம் செய்துள்ள தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி உள்ளிட்ட அனைத்து இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும், தி.மு.க.வின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் குறிப்பிட்டுள்ளது போல், ‘உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது‘.

அந்த தியாகங்கள் இந்த நாட்டை மேலும், மேலும் ஒருமைப்படுத்தி நாட்டு மக்களுக்கு வலிமையை ஊட்டும். இன்று நாம் மிக கடினமான தருணத்தில் இருக்கிறோம். ஒருபக்கம் கொரோனா பேரிடருடனான போராட்டம். இன்னொரு பக்கம் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி. தி.மு.க.வை பொருத்தவரை இதுபோன்ற காலங்களில் நாட்டின் நலன் சார்ந்து நிற்கும் இயக்கம்.

இந்தியாவின் வல்லமை

இந்தியாவின் எல்லைகளை பாதுகாத்திடவேண்டும் என்ற ஒற்றை நோக்கோடுதான் நாம் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறோம். அதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. நமது வீடான இந்திய திருநாட்டை பாதுகாக்க நாட்டிற்கே முன்னுரிமை. தன்னுடைய நிலத்திற்கும். மக்களுக்கும் வரும் சவால்களை முறியடிக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு. தி.மு.க.வை பொறுத்தவரை இந்த நாட்டு பிரதமர்களின் கரத்தை வலுப்படுத்தியிருக்கிறோம்.

அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்டியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பதில் எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. 1962-ம் ஆண்டு இந்தியசீன போரின் போது, சீனாவை முதலில் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது தி.மு.க. தான். தி.மு.க. சில மணி நேரங்களிலேயே நிதி திரட்டி ‘பாதுகாப்பு நிதி‘ வழங்கியது.

பெருமை

தி.மு.க.வினர் அனைவரும், எங்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கருணாநிதி அன்று கூறியது போல், ‘இந்த மண்ணின் மைந்தர்கள்‘, என்ற உரிமையும். உணர்வும் மிகக் கொண்டவர்கள்.

அனைத்து தருணங்களிலும் நாட்டின் நலனுக்கே முன்னுரிமை அளித்த அண்ணா மற்றும் கருணாநிதியின் தொலைநோக்கு பார்வையில் தி.மு.க. வளர்ந்தது. இன்று அத்தகைய தலைவர்களின் வழிநின்று, நாட்டின் நலன் போற்றி, இந்தியா என்னும் எண்ணத்தை பாதுகாத்திட உழைத்திடும் இயக்கத்தை வழிநடத்துகிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். 1962-ம் ஆண்டு போரின் போது முதல் களப்பலியானவர் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர் செல்வராஜ் என்பதை நினைவு கூர்கிறேன். இன்றைக்கு 58 ஆண்டுகள் கடந்த பின்னரும் ராணுவ வீரர் பழனியை தமிழகம் தியாகம் செய்திருக்கிறது.

தி.மு.க. துணை நிற்கும்

நாட்டை பாதுகாக்க தி.மு.க.வும், தமிழக மக்களும் முதலில் வருவார்கள்.

இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தி.மு.க. உறுதியுடன் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். போர்க்குரல் ஒலிக்கும் போது நாம் பின்வாங்க மாட்டோம். ஒரே நாடாக நாம் முன்சென்று, இந்திய நாட்டின் பெருமையை நிலைநாட்டிடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.