முழு ஊரடங்கு தொடங்கியது: சென்னை நகர சாலைகள் முழுமையாக வெறிச்சோடியது – போலீசார் தீவிர சோதனை
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 5-வது கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்திலும் தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் மட்டும் குறைந்தபாடில்லை. நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது. குறிப்பாக சென்னையிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் கொரோனா பரவல் அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று முதல் வருகிற 30-ந் தேதி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
மடக்கிப்பிடித்த போலீசார்
சென்னையில் போலீசார் சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து, ஏதாவது ஒரு பிரதான சாலையை வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்து, பிரதான சாலைகளில் டிரோன் கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். சென்னை நகருக்குள் 288 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 112 இடங்களிலும் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். 18 ஆயிரம் போலீசார் ஷிப்டு முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்பவர்களை தவிர, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வாகனங்களில் செல்வதற்காக சிறப்பு ‘இ பாஸ்‘ வைத்திருக்க வேண்டும். அந்த ‘பாஸ்‘ இருந்தவர்கள் மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும். அத்தகைய பாஸ் இல்லாதவர்களும் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் சென்னையின் மூலை, முடுக்குகளில் நின்றுகொண்டு தேவை இல்லாமல் சாலையில் வரும் வாகனங்களை போலீசார் மடக்கிப் பிடித்து அபராதத்தொகை விதித்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
நடந்து செல்ல அறிவுரை
சென்னையில் புறநகர் பகுதி முடியும் எல்லையில் தகரத்தால் சிறப்பு தடுப்புகள் ஏற்படுத்தி உள்ளனர். அவை ஒரு வாகனம் மட்டும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. வாகனங்களில் வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. சென்னையில் இருந்து வெளியே செல்பவர்களுக்கும், உள்ளே வருபவர்களுக்கும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது.
சென்னை வாலாஜா சாலையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சாலையில் வந்த மோட்டார் சைக்கிள்களை போலீசார் வழிமறித்து, பாஸ் இருக்கிறதா? என்று கேட்டனர். பாஸ் இல்லாதவர்கள் தங்களை விடுமாறு கெஞ்சி, கேட்டனர். எனினும் போலீசார் அவர்களை வாகனங்களில் செல்ல அனுமதிக்கவில்லை. மாறாக அபராதம் விதித்ததோடு, வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
ஊரடங்கை பொறுத்தவரையில் பொதுமக்கள் சற்று விழிப்புணர்வு அடைந்திருக்கிறார்கள். சாலைகளில் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்காகவும், மத்திய மாநில அரசு ஊழியர்கள், இயங்கி வரும் தனியார் கம்பெனி ஊழியர்களின் பணியாளர்கள் மட்டுமே வெளியே வந்தார்கள். எனினும் போலீசார் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்களை, அவர்கள் வசிக்கும் இருப்பிடத்துக்கு அருகே 2 கி.மீ. சுற்றளவில் நடந்து சென்றே வாங்கவேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பினார்கள்.
சாலைகள் வெறிச்சோடியது
முழு ஊரடங்கு காரணமாக அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, தியாகராயநகர் உஸ்மான் சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, காமராஜர் சாலை, ராஜீவ்காந்தி சாலை உள்பட சென்னை நகரின் பிரதான சாலைகள் போக்குவரத்துத்துக்கு தடை விதிக்கப்பட்டு, மூடப்பட்டது. இதனால் அந்த சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆம்புலன்சு போன்ற அத்தியாவசிய சேவைக்கான வாகனங்கள் மட்டும் அந்த சாலைகளில் அனுமதிக்கப்பட்டது. பாஸ் வைத்திருந்த ஒரு சிலர் மட்டுமே வாகனங்களில் சென்றனர்.
அனுமதிக்கப்பட்டிருந்த கடைகள் பிற்பகல் 2 மணியோடு பெரும்பாலான இடங்களில் மூடப்பட்டுவிட்டன. இதனால் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்களை காணமுடியவில்லை. சாலைகள் அனைத்தும் பாலைவனம் போல வெறிச்சோடியது. இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சென்னை நகரின் பல்வேறு இடங்களுக்கு சென்று முழு ஊரடங்கு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.
ஊரடங்கு வெற்றி
கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், பொதுமக்களிடையேயும் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள கடந்த சில ஊரடங்குகளை முழுமையாக பின்பற்றாத பலரும், தற்போது நோய் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்று பயந்து ஊரடங்கை மதிக்கத்தொடங்கியிருக்கிறார்கள். முழுமையாக பின்பற்றவும் தொடங்கி இருக்கிறார்கள்.
அதுபோக இந்த ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கிறார்கள். அந்தவகையில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு முதல் நாளில் வெற்றியை பதிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.