2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்ததா?இலங்கை அரசு விசாரணை நடத்த உத்தரவு
2011-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சங்கக்கரா தலைமையிலான இலங்கையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. ‘இந்த உலக கோப்பையை நாங்கள் விற்று விட்டோம். இறுதி ஆட்டத்தில் ‘மேட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்துள்ளது. இல்லாவிட்டால் இலங்கை அணி கோப்பையை வென்றிருக்கும். இதில் வீரர்களுக்கு தொடர்பு கிடையாது. ஆனால் பிக்சிங்கில் குறிப்பிட்ட சில குழுக்கள் ஈடுபட்டது’ என்று இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை மந்திரி மகிந்தானந்தா அலுத்காமகே சில தினங்களுக்கு முன்பு பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை முன்னாள் கேப்டன் சங்கக்கரா திட்டவட்டமாக மறுத்தார்.
இந்த நிலையில் அலுத்காமகேயின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும்படி அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி துலாஸ் அலஹப்பெருமா உத்தரவு பிறப்பித்துள்ளார். 2 வாரத்துக்கு ஒரு முறை விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்பிக்கும்படி விளையாட்டுத்துறை செயலாளர் ருவான்சந்த்ரா தலைமையிலான கமிட்டிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.