இந்தியாவும் சீனாவும் கடினமான சூழலில் உள்ளன, உதவ முயற்சித்து வருகிறோம்: டிரம்ப் சொல்கிறார்
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15 ஆம் தேதி இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு வீரர்களும் பரஸ்பரம் கடும் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் உயிர்பலி ஏற்பட்டுள்ள்ளது. எனினும், சீன வீரர்கள் எத்தனை பேர் இந்த மோதலில் பலியாகினர் என்ற துல்லிய தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், “ இந்தியாவும் சீனாவும் கடினமான சூழலில் உள்ளன. இந்தியா மற்றும் சீனாவுடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். மிகப்பெரும் பிரச்சினையை அவர்கள் கொண்டுள்ளனர். என்ன நடக்கிறது என்று நாம் பார்ப்போம். பிரச்சினைகளில் இருந்து மீண்டு வர உதவுவதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்றார்.