தமிழகம் இதுவரை வருமான வரித்துறை சோதனையில் ரூ.364 கோடி பறிமுதல் ; அதிக பட்சமாக அமைச்சர் உறவினரிடம் ரூ 11. கோடி பறிமுதல்
சென்னை
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த சில தினங்களாக வருமானவரித் துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்மந்தியும் தனியார் பள்ளிக் கூட்டமைப்பு களின் மாநில செயலாளருமான இளங்கோவனுக்கு சொந்தமான பள்ளிக் கட்டிடம் உட்பட பல இடங்களில் கடந்த 2 நாட்களாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இளங்கோவனுக்கு தருமபுரி மற்றும் ஓசூர் பகுதிகளில் சொந்தமாக கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும், டி.என்.சி. சிட்பண்ட் என்ற பெயரில் சென்னை, மதுரை, கோவை உட்பட பல இடங்களில் நிதி நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இந்த இடங்கள் உட்பட அவருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட சோதனை யில் இதுவரை ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுபவர் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர். இவரது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜேசிபி ஓட்டுநர் வலசுப்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரது வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இவரது வீட்டுக்கு நேற்று நள்ளிரவு சென்ற வருமானவரித் துறை இணை இயக்குநர் மதன்குமார் தலைமையிலான 15-க்கும் மேற்பட்ட அதி காரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அழகர்சாமி வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்த வைக்கோல் போரிலிருந்து 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக எடுக்கப்பட்டன. சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுபற்றி அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதேபோல், அருகில் வசிக்கும் கான்ட்ராக்டர் தங்கபாண்டியன், கோட்டைப்பட்டியில் வசிக்கும் முருகானந்தம் ஆகியோர் வீடுகளிலும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
மேலும், சென்னை தி.நகரில் உள்ள ஒரு தனியார் சிட் பண்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.6 கோடி கைப்பற்றினர். கரூரில் உள்ள நிதி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கன்னியாகுமரியில் ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.87 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.
திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலு, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி வீடு, கரூர் பைனான்சியர்கள் வீடு, திருச்சி மாவட்டத்தில் மொராய்ஸ் சிட்டி என்ற கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள், திருப்பூரில் ம.நீ.ம. கட்சி மாநில பொருளாளர் சந்திரசேகரின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் ஏற்கெனவே வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை நடத்தப்பட்ட வருமான வரித் துறையினரின் சோதனையில் ரூ.364 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், வேட்பாளர்கள் தொடர்புடைய நபர்களிடம் இருந்து மட்டும் ரூ.40 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப் பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தொடர் சோதனையால் வேட்பாளர்கள் கதிகலங்கி உள்ளனர். வாக்காளர் களுக்கு கொடுக்க பதுக்கி வைத்திருக் கும் பணத்தை வெளியே எடுத்தால், வரு மானவரித் துறை கண்டுபிடித்து மொத்த பணத்தையும் பறிமுதல் செய்து விடுவார்களோ என அச்சம் அடைந்துள்ளனர். இதனால் பல வேட்பாளர்கள் செலவு செய்யவே பயப்படுவதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.