கோவைக்கு வந்த யோகி ஆதித்யநாத்: கடைகள் மீது கல்வீச்சு, என்ன நடந்தது?
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். இதை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் கல்வீச்சு நடத்தி கடையை மூட வலியுறுத்தினர்.
புலியகுளம் வந்த ஆதித்யநாத், அங்கிருந்து வாகனப் பேரணியில் கலந்து கொண்டு, பிரசாரக் கூட்டம் நடக்கும், ராஜவீதி தேர்முட்டி திடலுக்கு வந்தார். அந்த இருசக்கர வாகனப் பேரணியில் வந்த வாகனங்கள், பெரிய கடைவீதியில் இருந்து நேராக சென்று, ஒப்பணக்கார வீதியில் வலதுபுறம் திரும்பி, ராஜவீதியை அடைந்து தேர்முட்டிக்குச் சென்றன.
முன்னதாக, இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட இருசக்கர வாகனங்கள், மாநகராட்சி அலுவலகம் உள்ள பெரியகடைவீதியில் இருந்து நேராக சென்று ஒப்பணக்கார வீதியை அடைந்து வலதுபுறமாக திரும்பும் போது, அங்கு சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதைப் பார்த்த, இருசக்கர வாகனப் பேரணியில் கலந்து கொண்ட ஒருவர், அங்கிருந்த கடையை மூட வலியுறுத்தி கல்வீசி தாக்கினார்.
அதைத் தொடர்ந்து கட்சிக் கொடி கட்டப்பட்டு இருந்த தடியால், சில வியாபாரிகளை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் அங்கு வந்ததைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த பாஜகவினர் அங்கிருந்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த உக்கடம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர் என மேலும் தெரிவிக்கிறது அச்செய்தி.