இந்தியாவில் 2020-21ம் நிதியாண்டில் நேரடி வரிகள் மூலம் ரூ.9.45 லட்சம் கோடி வருவாய் – மத்திய அரசு தகவல்
புதுடெல்லி,
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பி.சி.மோடி, இந்தியாவில் கடந்த 2020-2021 நிதியாண்டில் நேரடி வரிகள் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் குறித்த தகவலை வெளியிட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியாதவது;-
“நேரடி வரிகளில் கம்பெனி வரி மூலம் ரூ.4 லட்சத்து 57 ஆயிரம் கோடியும், தனிநபர் வருமான வரி மூலம் ரூ.4 லட்சத்து 71 ஆயிரம் கோடியும், பங்கு பரிவர்த்தனை வரி மூலம் ரூ.16 ஆயிரத்து 927 கோடியும் கிடைத்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் நேரடி வரி வருவாய்க்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.9 லட்சத்து 5 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால், அதை விட 5 சதவீதம் அதிகமாக வசூலித்து வருமான வரித்துறை சாதனை படைத்துள்ளது. கணிசமாக ‘ரீபண்ட்’ கொடுத்த பிறகும் இவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது. அதே சமயத்தில், முந்தைய 2019-2020 நிதியாண்டின் நேரடி வரி வருவாயுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் குறைவுதான்.
வரி செலுத்துவோருக்கு சுமையை குறைத்து சிறப்பான சேவைக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதுதான் வருவாய் அதிகரிப்புக்கு காரணம். நடப்பு நிதியாண்டிலும் இது எதிரொலிக்கும் என்று நம்புகிறோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.