கொரோனா கட்டுப்பாடுகள் பலன் அளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்; தமிழக அரசு எச்சரிக்கை
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பலன் அளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை பற்றியும், அதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து 8-ந் தேதியன்று அனைத்து மாநிலங்களோடு காணொலி காட்சி மூலம் பிரதமர் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, வருவாய்த்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, பொதுத்துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில் குமார், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் தடுப்பூசி
இந்த கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.தடுப்பூசி குறித்து இன்னும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுமதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் விரைந்து தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புதிய தொற்று
தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசால் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று விகிதம் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த பிப்ரவரி வரை தொடர்ந்து குறைந்து வந்தது. தற்போது சராசரியாக தினமும் 3,900-க்கு அதிகமான நபர்களுக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள், நடமாடும் காய்ச்சல் முகாம்கள், பரிசோதனை மையங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு, நோய் உறுதி செய்யப்படுபவர்கள் உடனடியாக மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், கொரோனா கவனிப்பு மையங்களில் அனுமதிக்கவும் அல்லது வீட்டில் தனிமைப்படுத்துவதற்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.முககவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி ஆகியவைகளை மீண்டும் கடைபிடிக்க வலியுறுத்தப்படுவதோடு, இதை மீறுபவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதுவரை 31 லட்சத்து26 ஆயிரத்து 36 பேருக்குமுதல் தவணை தடுப்பூசி, 3 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி என மொத்தம் 34 லட்சத்து 87 ஆயிரத்து 36 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பரிசோதனை
இதுவரை 2.01 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன, மாநிலம் முழுவதும் வீடு வீடாக சென்று கண்காணித்தல், நடமாடும் காய்ச்சல் முகாம்கள் உள்பட தினமும் 3 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் கொரோனா நோய் குணப்படுத்தும் முறையில் இந்திய முறை மருத்துவம் ஈடுபடுத்தப்படுகிறது. பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ வல்லுநர்களோடு அடிக்கடி கலந்து ஆலோசித்து அவர்களின் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இறப்பு வீதம்
தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த பணிகளை முடுக்கிவிட ஏற்கனவே சென்னை மாநகராட்சி பகுதிகளில் 15 களப்பணி குழுக்களும் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்டத்தில் பதிவாகும் தொற்று எண்ணிக்கையின் அளவு, கோவிட் பராமரிப்பு மையம் தொடங்கப்பட்ட நிலை, அந்த மாவட்டத்தில் தடுப்பூசி போடும் நிலைமை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பணிகள் மற்றும் முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை கலெக்டர்களுடன் இணைந்து கண்காணிப்பார்கள். ஒரு காலவரையறைக்குள், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் 100 சதவீத தடுப்பூசி போடும் பணியையும் முடிக்க முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக, 14-ந் தேதி முதல் 16-ந் தேதிவரை அந்தந்த மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து தகுதி வாய்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையும் எடுக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் காரணமாக, தற்போது தமிழ்நாட்டில் நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 95.55 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் என்பதோடு, இறப்பு வீதம் 1.41 சதவீதமாக குறைந்து உள்ளது.
எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலன் கருதியும் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கு 10-ந் தேதி முதல் முற்றிலுமாக தடைவிதித்தும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தும் அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த முயற்சியில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும். இந்த கொரோனா தொற்று 2-வது அலையை சமாளிக்க, அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.