அசாமில் பயங்கர நிலநடுக்கம்: அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்- முதல் மந்திரியிடம் பிரதமர் உறுதி
அசாமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது
புதுடெல்லி,
அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று காலை 7.51 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சோனித்பூரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. மேற்கு வங்க மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்கள், மற்றும் சில வடகிழக்கு மாநிலங்கள், பூடான் நாட்டிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது தொடர்பான புகைப்படங்களை அங்குள்ள மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததை காண முடிந்தது.
பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, மாநில முதல் மந்திரி சர்பானந்தா சோனோவாலுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் அசாம் மக்கள் நலமுடன் இருக்க பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.