Breaking News
மே 1 முதல் கொரோனா தடுப்பூசி – இன்று மாலை 4 மணிக்கு முன்பதிவு ஆரம்பம்

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தற்போது இந்தியவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் வயதை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வரும் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு வகை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதனை பெறுவதற்காக ‘கோவின்’ இணையதளம் அல்லது ‘ஆரோகிய சேது’ செயலி மூலமாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த நிலையில் வரும் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு, இன்று முதல் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய முடியவில்லை என புகார் எழுந்தது. நேற்று நள்ளிரவு முதல் பலர் முன்பதிவு செய்ய முயற்சி செய்தால், இணையதள சர்வரில் முடக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று மாலை 4 மணி முதல் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, https://www.cowin.gov.in என்ற, இணையதளத்திற்குள் சென்று, ‘ரிஜிஸ்டர் மை செல்ப்’ என்பதை அழுத்த வேண்டும். பின், மொபைல் போன் எண் பதிவு செய்து, பெயர், வயது உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் உள்ளிட்ட, அரசு அங்கீகரித்த அடையாள அட்டை எண்ணை பதிந்து, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.