வைப்பு தொகை மீதான வட்டி வருவாய்: வரி விலக்குக்கான படிவம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்; வங்கிகளுக்கு மூத்த குடிமக்கள் கோரிக்கை
வங்கிகளில் வைப்புத் தொகை மீதான வட்டி வருவாய்க்கு வரிப்பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க 60 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், படிவம் 15-ஜி மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் 15-எச் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த படிவத்தை, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால், இந்தப் படிவம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று மூத்த குடிமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். குறிப்பாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வங்கி வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படிவம் 15-ஜி மற்றும் எச் தாக்கல் செய்வது சிரமமானது. எனவே, இதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-
படிவம் 15-ஜி மற்றும் எச் வழங்குவது மிகவும் எளிதானது. படிவத்தை நிரப்பி வங்கி இ-மெயிலில் அனுப்பினால் போதுமானது. ஏப்ரலில் தாக்கல் செய்தால், அவர்களது வைப்புத் தொகை முதிர்வு அடையும் நிலையில், வரிப்பிடித்தம் என்பது இருக்காது. படிவம் தாக்கல் செய்யத் தவறினால் முதிர்வின் போது வரிப்பிடித்தம் செய்யப்படும். இதைத் தவிர்க்கவே, ஏப்ரலில் படிவம் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.