ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி: தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு
ஸ்டெர்லைட் ஆலை
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை உருவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான தீவிர முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளது.இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம், ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதன்பேரில் கோர்ட்டு மனுவை விசாரித்தது. இதற்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்த நிலையில், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஆலையை திறக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதனை தமிழக அரசு கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஆலையை திறக்க அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டது.
உயர் போலீஸ் அதிகாரிகள்
இதையடுத்து ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீஸ் உயர் அதிகாரிகள் தூத்துக்குடியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி மேற்பார்வையில், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு, போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயக்குமார் (தூத்துக்குடி), சுகுணாசிங் (தென்காசி), பத்ரிநாராயணன் (கன்னியாகுமரி) ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
3 அடுக்கு பாதுகாப்பு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை முன்பு மற்றும் ஆலைக்கு எதிராக போராட்டம் நடந்த கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளை கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.மேலும், தண்ணீரை பீய்ச்சி அடிக்கக்கூடிய வாகனம், வஜ்ரா வாகனம் உள்ளிட்ட கலவர தடுப்பு வாகனங்களையும் போலீசார் முக்கிய இடங்களில் நிறுத்தி வைத்து
இருந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆங்காங்கே இரும்பு தடுப்புகளை கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தி இருந்தனர். தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களின் செயல்பாடுகளையும் கண்காணித்து வந்தனர்.
ஆலையை திறக்க எதிர்ப்பு
முன்னதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, தூத்துக்குடி மத்திய வணிகர் சங்க பேரவை தலைவர் விநாயகமூர்த்தி, பண்டாரம்பட்டி வசந்தி, வக்கீல்கள் அதிசயகுமார், அரிராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் அவர்கள் கூறும் போது, ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் என்பது எந்தவித அரசியல் கட்சிகளாலும் நடைபெறவில்லை. தன்னெழுச்சியாக மக்களாக முன்வந்து போராட்டம் நடத்தி ஆலையை மூடி உள்ளனர்.ஆனால், ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி தரலாம் என்பது குறித்த ஆலோசனைக்கு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மட்டும் போதும் என்று நினைத்து இருப்பது கண்டிக்கத்தக்கது. ஆலைக்கு அனுமதி வழங்குவது குறித்து மக்களுடைய கருத்துக்களை கேட்பதுதான் சரியானது.
தூத்துக்குடி மக்களை பொறுத்தவரை ஸ்டெர்லைட் ஆலையை எந்த காரணம் கொண்டும் திறக்க அனுமதிக்க மாட்டோம். எனவே, ஆக்சிஜன் உற்பத்திக்காக கூட ஆலையை திறக்க கூடாது. ஆலையில் உள்ள தாமிர உற்பத்தி அலகுகள் முற்றிலும் பிரித்து அழிக்கப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முடிவை கைவிட வேண்டும்’ என்றனர்.