Breaking News
அதிகரிக்கும் கொரோனா தொற்று: பிரதமர் மோடி இன்று மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை சுனாமியாய் சுழன்று அடித்து வருகிறது. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான புதிய நோயாளிகளும், ஆயிரக்கணக்கான மரணங்களும் அதிகரித்து வருகின்றன.

அதிகரிக்கும் நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் ஆஸ்பத்திரிகளும், பெருகி வரும் பிணங்களை எரிக்க முடியாமல் சுடுகாடுகளும் திணறி வருகின்றன. இதனால் வரலாறு காணாத துயரத்தை நாடு அனுபவித்து வருகிறது.

இந்த சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பிரதமர் மோடி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இது தொடர்பாக பல்வேறு துறை சார்ந்தவர்களுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி, கொரோனாவை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளை மாநிலங்களுக்கும், சுகாதாரத்துறைக்கும் அறிவித்து வருகிறார்.

இந்த வரிசையில் இன்று (வெள்ளிக்கிழமை) அவர் தனது மந்திரிகள் குழுவினருடன் மெய்நிகர் முறையில் ஆலோசனை நடத்துகிறார். இதில் கொரோனாவால் நாடு சந்தித்து வரும் மோசமான சூழல் மற்றும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

நாட்டில் கொரோனாவின் 2-வது அலை தொடங்கியபின் மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி நடத்தும் முதலாவது ஆலோசனை கூட்டம் இதுவாகும்.

இதற்கிடையே ராணுவ தளபதி நரவனேயுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்கு ராணுவம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றும் தயார் நிலைகள் குறித்து மோடி ஆய்வு செய்தார்.

அப்போது ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நரவனே பிரதமருக்கு விளக்கினார். அதன்படி நாடு முழுவதும் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் தற்காலிக மருத்துவமனைகளை ராணுவம் அமைத்து வருவதாகவும், மக்கள் தங்கள் அருகாமையில் உள்ள ராணுவ மருத்துவமனைகளை நாடலாம் எனவும் பிரதமருக்கு நரவனே எடுத்துரைத்தார்.

மேலும் இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் டேங்கர்கள், எடுத்துச்செல்லப்படும் வாகனங்களை கையாளுவதற்கு திறன்மிகுந்த வீரர்களை பயன்படுத்தி வருவதாகவும் பிரதமரிடம் நரவனே தெரிவித்ததாக ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.