Breaking News
பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று காலமானார்

சென்னை,

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் உயிரிழந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியூள்ளது.

இந்நிலையில் தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான பாண்டு (74) இன்று அதிகாலை காலாமானார்.

முன்னதாக கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தபோது, இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி குமுதாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை குணச்சித்திர நடிகர் பாண்டு அவரது பேச்சு, சிரிப்பு மற்றும் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அவரது திடீர் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.