காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ‘ஆஷா’ பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 வழங்கப்படும்: பிரியங்கா காந்தி உறுதி
புதுடெல்லி:
உத்தரப் பிரதேச மாநில அரசு, அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களை (ஆஷா) அவமதிப்பதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திகுற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம், ஷாஜஹான்பூரில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்திக்க முயன்ற ஆஷா பணியாளர் மீது காவல் துறை தாக்குதல் நடத்திய வீடியோவை ஒன்றைபிரியங்கா காந்திடுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவுடன், டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
உத்தரப் பிரதேச அரசு ஆஷா சகோதரிகள் மீது நடத்தும் ஒவ்வொரு தாக்குதலும், அவர்கள் செய்த பணியை அவமதிக்கும் செயலாகும். எனது ஆஷா சகோதரிகள் கொரோனா வைரஸ் காலங்களிலும், பிற சந்தர்ப்பங்களிலும் தங்கள் சேவைகளை விடாமுயற்சியுடன் வழங்கியுள்ளனர். கவுரவம் அவர்களின் உரிமை. அவர்கள் சொல்வதைக் கேட்பது அரசின் கடமை.
ஆஷா சகோதரிகளுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். இந்த போராட்டத்தில் நான் அவர்களுடன் இருக்கிறேன். ஆஷா சகோதரிகளின் கவுரவ உரிமை மற்றும் அவர்களின் மரியாதைக்கு காங்கிரஸ் கட்சி உறுதி ஏற்கும். காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும், ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் ரூ.10,000 கவுரவ ஊதியமாக வழங்கப்படும் ” என்று குறிப்பிட்டிருந்தார்.