தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான “ரெட் அலர்ட்”
சென்னை,
வடகிழக்கு பருவமழை கடந்த 3 தினங்களாக தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவு ஒரே நாளில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பதிவானது. அதன் தொடர்ச்சியாக சில மாவட்டங்களிலும் கன முதல் மிக கன மழை வரை பெய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழையின் தீவிரம் நாளை மறுதினம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, வங்க கடலில் ஏற்கனவே அறிவித்தபடி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்), கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். அதிகனமழை 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை பெய்யக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக வழங்கப்படும் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
மிக கனமழைக்கு வாய்ப்பு
இதேபோல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சீ புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இன்று பெய்ய வாய்ப்புள்ளது.
கன முதல் மிக கனமழை பெய்யக்கூடிய இடங்களில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரையில் மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த இடங்களுக்கு நிர்வாக ரீதியாக ‘ஆரஞ்சு அலர்ட்’ அளிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னையில் நாளை அதிகனமழை
நாளை (வியாழக்கிழமை) திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். இந்த பகுதிகளுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வட கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், நீலகிரி, கோவை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
13-ந் தேதி (சனிக்கிழமை) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை வரை மணிக்கு 40 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மகாபலிபுரம், செய்யூர் தலா 12 செ.மீ., சித்தார், மரக்காணம், வானூர், ஒட்டப்பிடாரம், சிவலோகம் தலா 9 செ.மீ., சிவகிரி, மதுராந்தகம், கன்னிமார், களியல் தலா 8 செ.மீ., மயிலாடி, உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், வளவனூர், பேச்சிப்பாறை தலா 7 செ.மீ., சென்னை கலெக்டர் அலுவலகம், தண்டையார்ப்பேட்டை, திண்டிவனம், பெரம்பூர், கேளம்பாக்கம், திருப்போரூர், பெருஞ்சாணி அணை, குழித்துறை, பாளையங்கோட்டை, சூரலக்கோடு, புத்தன் அணை தலா 6 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்திருக்கிறது.
வடகிழக்கு பருவமழை காலமான கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் நேற்று வரையில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 24 செ.மீ. ஆகும். ஆனால் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இயல்பை விட 46 சதவீதம் அதிகரித்து, 36 செ.மீ. என்ற அளவில் பதிவாகி இருக்கிறது. இதில் கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் இயல்பை விட மழை அதிகம் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை உள்பட 9 மாவட்ட பள்ளி, கல்லூாிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை
கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இது தொடர்பாக தமிழக அரசின் பொதுத்துறை (பல்வகை) அரசு செயலாளர் டி.ஜகந்நாதன் வெளியிட்டுள்ள அரசாணையில், “வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைஉருவாகியுள்ளதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) என 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது” என்று அதில் அவர் கூறியுள்ளார்.
தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறுகிறது
தென் கிழக்கு வங்க கடல்பகுதியில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று இரவோ அல்லது நாளை காலையோ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.
அது மேலும் மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை தமிழக கடற்கரையை நெருங்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
அதிகனமழையால் பாதிப்பு என்ன இருக்கும்?
தமிழகத்தில் சில இடங்களில் கன மழை முதல் அதி கன மழையால் எந்த அளவில் பாதிப்பு இருக்கும்?, என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-
* சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும். நகர்ப்புறங்களில் உள்ள பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்படும்.
* சேதம் அடைந்த நிலையில் இருக்கும் கட்டமைப்புகளில் பாதிப்பு ஏற்படும்.
* மண் சாலைகளில் லேசான பாதிப்புகள் இருக்கும்.
* ஏதாவது ஒரு பகுதிகளில் நிலச்சரிவுகள், மண்சரிவுகள் ஏற்படலாம்.
* வெள்ளம் காரணமாக தோட்டக்கலை மற்றும் வளர்ந்து இருக்கும் பயிர்கள் சேதம் அடையும்.
* சில நதிநீர் பிடிப்புகளாக இருக்கும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.
* கடலோர பகுதிகளில் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல மக்களுக்கு தடைவிதிக்கலாம்.