பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு 5,558 கன அடியாக அதிகரிப்பு
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. தொடர் மழை மற்றும் அம்மப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வரத்து காரணமாக பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டி வருகிறது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 ஆயிரம் கனஅடியாக இருந்த தண்ணீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.
இதற்கிடையே தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அம்மப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து உள்ளது. இதனால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
இதையடுத்து ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 5 ஆயிரத்து 558 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 4,308 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. தற்போது ஏரியில் 33.28 அடி தண்ணீர் உள்ளது. 3,231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் 2,603 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கனமழை காரணமாக புழல் ஏரியின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்தது. ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. தற்போது ஏரியில் 18.73 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. இதில் 2,756 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி உள்ளது.
மழை காரணமாக ஏரிக்கு 1,078 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து தொடர்ந்து 2,189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏரிகளில் உள்ள நீர் இருப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். நேற்று பலத்த மழை இல்லை. இதனால் ஏரிகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. மீண்டும் கனமழை தொடங்கினால் பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.